2017-09-20 15:50:00

அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களை வேரோடு களைய...


செப்.20,2017. அடிமை வர்த்தகம், விலை மகளிராக பெண்களும், குழந்தைகளும் விற்கப்படுதல் ஆகிய அவலங்களை, கத்தோலிக்கத் திருஅவை பல ஆண்டுகளாக கண்டனம் செய்து வந்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'கட்டாய பணியமர்த்தல், நவீன அடிமைத்தனம், மற்றும், மனித வர்த்தகம் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பட அழைப்பு' என்ற தலைப்பில், ஐ.நா.அவையின் தலைமையகத்தில் செப்டம்பர் 19, இச்செவ்வாயன்று நிகழ்ந்த கூட்டத்தில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

நவீன அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களை வேரோடு களைவதற்கு, வெறும் சட்டங்கள் மட்டும் சக்தி வாய்ந்தவை அல்ல, மாறாக, இது மனிதகுலத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்ற உணர்வு, அனைத்து தரப்பினரிலும் உருவாக்கப்படவேண்டும் என்று, பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

அடிமைத்தனத்தின் அரக்கப்பிடியிலிருந்து, பெண்களையும், குழந்தைகளையும் காப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவையின் பல நிறுவனங்கள் பணியாற்றிவருகின்றன என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறினார்.

அடுத்துவரும் சில நாட்களில், மனித வர்த்தகத்திற்கு எதிராக உலகளாவிய அளவில் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது குறித்து, திருப்பீடம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என்று, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.