2017-09-20 16:18:00

மோதல்களைத் தவிர்க்க, அரசுகள் அதிகம் செலவழிக்கின்றன


செப்.20,2017. மோதல்களைத் தடுப்பதற்கும், மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கும், சமுதாயத்தின் மற்றும் பூமிக்கோளத்தின் வளங்களை வளர்ப்பதற்கும் உலக நாடுகள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, ஐ.நா. அவையின் 72வது அமர்வுக்குத் தலைமை வகிக்கும், Miroslav Lajčák அவர்கள் கூறினார்.

உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு, ஐ.நா. அவையின் தலைமையகத்தில் துவங்கியுள்ள வேளையில், இச்செவ்வாயன்று தன் துவக்க உரையை வழங்கிய தலைவர், Miroslav Lajčák அவர்கள், உலகெங்கும் நிகழும் மோதல்களைத் தவிர்ப்பதற்கு, அரசுகள் மிக அதிக அளவில் செலவழிக்கின்றன என்று கூறினார்.

மோதல்களைத் தவிர்ப்பதற்கு, மக்களின் முழுமையான முன்னேற்றம் ஒரு முக்கிய காரணம் என்பதை அரசுகள் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று Lajčák அவர்கள் அழைப்பு விடுத்தார்.

எதிர்காலத்தைக் குறித்து, இளையோர் மனம் தளர்ந்துபோய் இருக்கின்றனர் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய Lajčák அவர்கள், நம்பிக்கையை வளர்ப்பது இன்றைய உலகத் தலைவர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.