2017-09-20 15:31:00

பாசமுள்ளப் பார்வையில் : தாயன்பை அறியாத உன்னதத் தாய்


அப்பாவின் அன்பைமட்டுமே கண்டு, அனுபவித்து வளர்ந்த அவ்விளம் பெண்ணுக்கு, அம்மா இல்லையே என்பது, வெகுநாள் ஏக்கமாகவே இருந்தது. 'என் அம்மாவை எங்கு சென்று நான் தேடுவேன்' என்று தனக்குள்ளேயே அவர் அடிக்கடி கேட்டுக்கொள்வார். 6 வயதிலிருந்து எத்தனை இடம் மாற்றியாகிவிட்டது! சித்தப்பா வீட்டில் ஓராண்டு, சித்திக்குப் பிடிக்காததால், அத்தை வீட்டில் நான்கு ஆண்டுகள், அதன்பின், ஓர் அனாதை இல்லத்தில் 11 ஆண்டுகள் என்று, காலம் வேகமாக ஓடிவிட்டது.

கடந்த மாதம்தான் அவ்விளம்பெண்ணுக்கு திருமணம் நிகழ்ந்தது. அந்தக் குடிசை வீட்டில், அம்மா என்று அழைக்க, மாமியாரும் இல்லை. ஏன் தனக்கு மட்டும், யாரையும் அம்மா என்றழைக்கும் பாக்கியத்தை இறைவன் தரவில்லை என்று மனதிற்குள்ளேயே ஏங்கினார், அவ்விளம்பெண்.

அம்மாவின் அன்பை அனுபவிக்க வழியற்ற அவர், அம்மாவானபோது, அவருக்கு இவ்வுலகமே ஒளிமயமாகத் தெரிந்தது. அம்மாவைத் தேடிய தான், ஓர் உன்னத அம்மாவாகத் திகழவேண்டும், தன் குழந்தைக்கு, அம்மாவின் அனைத்து அன்பையும் அள்ளித்தந்து, அக்குழந்தைக்கு எவ்வித ஏக்கமும் வராமல் வளர்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்தார்.

அம்மாவின் அன்பை சுவைக்கும் பாக்கியம் பெறவில்லையெனினும், அங்கு ஓர் உன்னத அம்மா உருவாகியிருந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானோலி
All the contents on this site are copyrighted ©.