2017-09-20 15:49:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : உரோமைக்கு வெளியே கிறிஸ்தவம் - 2


செப்.20,2017. பழங்காலத்தில் விளங்கிய மாபெரும் வல்லரசுகளில் உரோமை பைசான்டைன் பேரரசும் ஒன்றாகும். இப்பேரரசுக்கு, பார்த்தியப் பேரரசு (Parthian Empire) எப்போதுமே போட்டி பேரரசாக இருந்து வந்தது. இந்த இரு வலிமை வாய்ந்த பேரரசுகளுக்கும் இடையே நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பகைமை நிலவியதாகச் சொல்லப்படுகின்றது. உரோமைப் பேரரசின் மேன்மை, உரோமன் இராணுவத்தை வைத்தே கணிக்கப்பட்டது. உரோமைப் பேரரசுக்கும், பார்த்தியப் பேரரசுக்கும் இடையே ஏறத்தாழ கி.மு.53ம் ஆண்டிலிருந்து கி.பி.217ம் ஆண்டுவரை போர்கள் நடந்துவந்தன.   உரோமைப் பேரரசு மத்தியதரைக்கடல் பகுதி முழுவதிலும் பண்பாடுள்ள பேரரசாகப் பரவியிருந்தாலும், பார்த்தியப் பேரரசு இதற்கு முள்ளாகத் தொடர்ந்து குத்திக்கொண்டே இருந்தது. உரோமையர்கள் மெசபத்தோமியாவரை தங்களின் எல்லையை விரிவுபடுத்தினாலும், பார்த்தியப் பேரரசு உலகின் கிழக்குப் பகுதி வரையிலும், சீனா வரையிலும் பரவியது. இவ்விரு பேரரசுகளுக்கும் வெவ்வேறு கலாச்சாரங்களும், வெவ்வேறு போர்முறைகளும் இருந்தன. உரோமைப் பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர். அகுஸ்துஸ் சீசரே, உரோமைப் பேரரசை கி.மு.27ம் ஆண்டு முதல், கி.பி.14ம் ஆண்டுவரை மிகுந்த வல்லமையோடு ஆட்சிசெய்த மிகச்சிறந்த பேரரசர் ஆவார். உரோமையர்கள் பல நாடுகளைக் கைப்பற்றி எல்லாருக்கும் ஒரே சட்டம் என்ற விதிமுறையைக் கொண்டு வந்தனர். இது, பல்வேறு மக்கள் மத்தியில் ஒன்றிப்பைக் கொணர்ந்தது. பேரரசர் பெரிய கான்ஸ்ட்ட்டைன் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியது, உரோமைப் பேரரசின் திருஅவை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்திருந்தது. ஒரு கட்டத்தில் உரோமைப் பேரரசும் பார்த்தியப் பேரரசும் எல்லைகளில் சந்தித்து பகைமையைப் போக்கிக்கொண்டனவாம்.

பார்த்தியப் பேரரசு (கி.மு.247 – கி.பி.224) என்பது, பழங்கால ஈரான் மற்றும் ஈராக்கில், ஈரானிய அரசியல் மற்றும் கலாச்சார அதிகாரத்தைக் கொண்டிருந்த பேரரசாகும். கி.மு.3ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட Parni இனத் தலைவரான பார்த்தியாவின் முதலாம் Arsacid பெயராலும் (Arsacid Empire) இப்பேரரசு அழைக்கப்பட்டது. பண்டைய ஈரானின் பார்த்திய மொழி பேசும் மக்கள், ஈரானிலும், ஈராக்கிலும் அரசியல் மற்றும் நாகரீகத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியவர்கள். பார்த்தியப் பேரரசு, வடக்கில், யூப்ரட்டீஸ் வரை, அதாவது தற்போதைய மத்திய-கிழக்கு துருக்கி வரையிலும், பரவியிருந்தது. அதோடு, மத்தியதரைக்கடல் பகுதியில் உரோமன் பேரரசுக்கும், சீனாவின் ஹான் பேரரசுக்கும் இடையில் பட்டு வர்த்தகப் பாதையை அமைத்து வர்த்தகம் மற்றும் பொருளாதார மையமாகவும் இது விளங்கியது. பார்த்தியப் பேரரசு தற்போதைய ஈரான், அர்மீனியா, ஈராக், ஜார்ஜியா, கிழக்கு துருக்கி, கிழக்கு சிரியா, அசர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், குவைத், பாரசீக வளைகுடா, சவுதி அரேபியாக் கடற்கரை, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்டிருந்தது. ஆயினும், செசானியர்கள், கி.பி 224ம் ஆண்டில் பார்த்தியப் பேரரசின் இறுதி மன்னர் நான்காம் அர்தபனாஸை வென்றதன் மூலம் பார்த்தியப் பேரரசு வீழ்ச்சி கண்டது.

பெர்சியாவில் இஸ்லாம் மதம் பரவத் தொடங்குவதற்குமுன், அப்பகுதியை கடைசியாக ஆட்சி செய்தவர்கள் செசானியர்கள். கி.பி.651ம் ஆண்டில் இவர்களின் ஆட்சி கவிழ்ந்தது. செசானியர்கள், பெர்சியாவில் தொடக்கத்தில் கிறிஸ்தவர்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டனர். ஆனால் பிற்காலத்தில் சமய மற்றும் அரசியல் காரணங்களால், குறிப்பாக, அரசர் 2ம் சப்போர் (Saphor II) காலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் இடம்பெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த இனத்தின் அரசர் 2ம் சப்போர் கி.பி.309ம் ஆண்டில் அரியணையில் அமர்ந்தார். இவரது ஆட்சி காலத்தின் நான்காம் ஆண்டில், கிறிஸ்தவர்க்கெதிராக கடுமையான அடக்கமுறைகள் இடம்பெற்றுள்ளன. அரசர் 2ம் சப்போரால் கிறிஸ்தவர்கள் நசுக்கப்பட்டதற்கு முதல் காரணம் அரசியல். உரோமைப் பேரரசர் கிறிஸ்துவத்தைத் தழுவியதால்,  அப்பேரரசின் பழைய எதிரியான பெர்சியா, கிறிஸ்தவத்திற்கு எதிரானதாக மாறியது. பெர்சியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் உரோமைப் பேரரசுக்கு உதவுகின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. உரோமைப் பேரரசு வெற்றியடைவதையே கிறிஸ்தவர்கள் விரும்புகின்றனர் என அரசர் நினைத்தார்.

அடுத்து பெர்சியாவில் Zoroastrianism ஆழமாக வேரூன்றியிருந்தது. இது நாட்டின் தேசிய வாழ்வோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. மூன்றாம் நூற்றாண்டின் முதல் பாதிப் பகுதியில் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது இதற்கு அச்சுறுத்தலாக இருந்தது. கிறிஸ்தவர்கள் இவர்களின் புனிதப் போதனைகளை அழிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனாலே பெர்சியாவில் கிறிஸ்தவர்கள் நசுக்கப்பட்டனர். சூரியக்கடவுளை வணங்க மறுத்த நூற்றுக்கணக்கான ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும் கிறிஸ்தவப் பொதுநிலையினர் கைதிகளை, அரசர் தலைவெட்டிக்கொன்றார். இந்த அரசர் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.