2017-09-20 15:28:00

"எதிர்காலத்தை நோக்க உதவும் புண்ணியமே, நம்பிக்கை"


செப்.20,2017. "இருளிலும், இறந்த காலத்திலும் உள்ளத்தைப் பூட்டிவைக்காமல், எதிர்காலத்தை நோக்குவதற்கு உதவும் ஒரு புண்ணியமே, நம்பிக்கை" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இப்புதனன்று இடம்பெற்றன.

இளையோரை மையப்படுத்தி இப்புதனன்று பொது மறைக்கல்வி உரையை வழங்கியத் திருத்தந்தை, எதிர்மறையான எண்ணங்கள், செய்திகள் இவற்றின் விளைவாக மனிதர்கள் மனமிழந்து போவதைத் தவிர்த்து, வாழ்வைக் கட்டியெழுப்ப முயற்சி செய்யவேண்டும் என்று கூறிய கருத்துக்களையொட்டி, அவரது டுவிட்டர் செய்தியும் அமைந்துள்ளது.

கீழே விழுந்த மனிதர்கள் எழுந்து அமரவேண்டும், அமர்ந்திருக்கும் மனிதர்கள் எழுந்து நடக்கவேண்டும், மனச் சலிப்பினால் செயலற்று போனால், வாழ்வை, நற்செயல்களால் நிரப்பவேண்டும் என்று தன் மறைக்கல்வி உரையில் நம்பிக்கையைக் குறித்து திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மேலும், உலக இஸ்லாமியக் கழகத்தின் தலைமைச் செயலரான, முனைவர், முகம்மது அல்-இஸ்ஸா (Muhammad al-Issa) அவர்களை, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட முறையில் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.