2017-09-19 17:03:00

புலம்பெயர்வோர் குறித்த அக்கறை, பணியாக வடிவெடுக்கட்டும்


செப்.19,2017. இயேசுவின் திரு இதய மறைப்பணியாளர்கள் சபையின் நிறுவனரும், குடிபெயர்வோரின் பாதுகாவலருமான புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி அவர்கள் இறந்ததன் நூறாம் ஆண்டையொட்டி, அச்சபையினருக்கு சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சபையின் பொது அவைக் கூட்டம் இம்மாதம் 17 முதல் 23 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிக்காகோவில் இடம்பெற்றுவருவதைப் பற்றியும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி, பிரான்ஸ், இஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள், மத்திய அமெரிக்கா, அர்ஜென்டினா, மற்றும், பிரேசில் அகிய நாடுகளில், அன்னை கபிரினியின் காலத்திலேயே அவரின் பணிகள் பிரபலமடைந்ததைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை13ம் லியோ அவர்களின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்தவர்களாக, இத்தாலிய குடியேற்றதாரர்களிடையே அமெரிக்க ஐக்கிய நாட்டில் தங்கள் பணிகளைத் துவக்கிய இயேசுவின் திரு இதய மறைப்பணியாளர்கள் துறவு சபையின் அதே தனிவரம், இன்றைய புலம்பெயர்ந்தோரிடையே பணியாற்றும் அனைவருக்கும் தேவைப்படுகின்றது எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயரும் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ள தான், அவர்களிடையே பணியாற்றும் இயேசுவின் திரு இதய மறைப்பணியாளர்கள் துறவு சபைக்கு சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கும் அதே வேளை, தனக்காக செபிக்குமாறு வேண்டுவதாகவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.