2017-09-19 16:23:00

பாசமுள்ள பார்வையில் - சலேத்து மாதாவின் கண்ணீர்


18ம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுற்ற பிரெஞ்சு புரட்சி, பிரெஞ்சு சமுதாயத்தை பெருமளவு காயப்படுத்தியிருந்தது. மக்களிடம் இறை நம்பிக்கை தொலைந்து போயிருந்தது. செபித்துவந்த உதடுகள், நாள் முழுவதும், இறைவனையும், அடுத்தவரையும் சபித்தவண்ணம் இருந்தன. ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கோவிலை மறந்துவிட்டு, தங்கள் பணிகளிலும், கேளிக்கைகளிலும் மூழ்கினர்.

இச்சூழலில், 1846ம் ஆண்டு, செப்டம்பர் 19ம் தேதி, சனிக்கிழமை, மாக்ஸிமின் (Maximin) என்ற சிறுவனும், மெலனி (Melanie) என்ற சிறுமியும், ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில், லா சலேத் ஃபல்லவோ (La Salette Fallavaux) என்ற ஊருக்கருகே ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில், அந்த மலைச் சரிவில், ஒரு பாறையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து, தன் கரங்களில் முகத்தைப் புதைத்தவண்ணம் அழுதுகொண்டிருந்தார். அவரைச் சுற்றி நிலவிய ஒளி, எதோ சூரியனே இறங்கிவந்து அங்கு அமர்ந்திருந்ததைப்போல் இருந்தது.

மக்கள் செல்லும் தவறான பாதைகளால் தானும், தன் மகனும் மிகவும் துயரடைந்திருப்பதாகக் கூறிய அப்பெண், மக்கள் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ளவில்லையெனில், வறட்சி, வியாதி, பட்டினி என்று பல துயரங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். பின்னர் அங்கிருந்து மறைந்துபோனார்.

மாக்ஸிமின், மெலனி இருவரும் தாங்கள் கண்ட காட்சியைப்பற்றி சொன்னபோது, அவர்களது குடும்பத்தினர் உட்பட, ஒருவரும் நம்பவில்லை. அவ்விருவரையும் சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டியபோதிலும், அவ்விரு சிறாரும் தாங்கள் கண்டது உண்மையான காட்சி என்பதில் உறுதியாக இருந்தனர்.

நாட்கள் செல்ல, செல்ல, அன்னை மரியை அவ்விரு சிறாரும் கண்டனர் என்று மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அன்னை காட்சி கொடுத்த இடத்திற்கு திருப்பயணிகள் சென்றனர். 5 ஆண்டுகளில், அப்பகுதியில் வியக்கத்தக்க மாற்றங்கள் உருவாயின. மக்கள் மீண்டும் கோவிலை நாடிச் சென்றனர். சபிக்கும் பழக்கம் குறைந்தது.

1851ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், அந்தக் காட்சிகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பக்தி முயற்சிகளையும் உண்மையென ஏற்றுக்கொண்டார். அந்தக் காட்சி நிகழ்ந்த இடத்தில் எழுப்பப்பட்ட கோவிலில் பீடமேற்றப்பட்டிருந்த அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு மகுடம் சூட்டுவதற்கு,  1879ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் உத்தரவளித்தார்.

லா சலேத் என்ற இடத்தில் அன்னை மரியா தோன்றியதால், அவர் லா சலேத் அன்னை, அல்லது, சலேத்து மாதா என்று வணங்கப்படுகிறார். சலேத்து மாதாவின் திருநாள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 19ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.