2017-09-19 17:13:00

நைஜீரியாவில் காலராவைக் கட்டுப்படுத்த போராடும் மருத்துவர்கள்


செப்.19,2017. நைஜீரியா நாட்டின் போர்னோ (Borno) மாநிலத்தில், காலரா நோய் வெகுவேகமாகப் பரவிவருவதை முன்னிட்டு, "எல்லைகளற்ற மருத்துவர்கள்" என்ற பிறரன்பு அமைப்பு, அப்பகுதியில் தன் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

போர்னோ மாநிலத்தில் இதுவரை, 2,627 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறும் அரசு அதிகாரிகள், இராணுவத்திற்கும், போகோ ஹாராம் புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களால், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து, முகாம்களில் அடைக்கலம் பெற்றிருப்பதே, இந்நிலையை உருவாக்கியுள்ளதென தெரிவித்தனர்.

Muna Garage என்ற முகாமில் மட்டும் ஏறத்தாழ 20,000 பேர் அடைக்கலம் தேடியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

நைஜீரியாவின் போர்னோ பகுதியில் 24 மணி நேரப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் "எல்லைகளற்ற மருத்துவர்கள்" அமைப்பு, கிழக்கு சாட், காங்கோ குடியரசு, ஏமன் ஆகிய நாடுகளிலும் காலரா நோயைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.