2017-09-19 16:56:00

திருத்தந்தையின் மறையுரை- இரக்கத்துடன் நெருங்கிச் செல்லுங்கள்


செப்.19,2017. துன்புறும் மனிதர்களுக்கு இரக்கம் காட்டவும், அவர்களுக்கு நெருக்கமாகச் சென்று கை கொடுத்து தூக்கிவிடவும், அவர்களின் மாண்பை மீட்டுக் கொடுக்கவும் உதவும் அருளைப் பெற இறைவனிடம் வேண்டுவோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நயீன் கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிரளித்தது பற்றி கூறும் இச்செவ்வாய்க் கிழமையின் நற்செய்தி வாசகம் குறித்து, சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத் திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயத்தின் உணர்வான இரக்கம் என்பது, முழு மனிதனின் ஈடுபாட்டையும் உள்ளடக்கியது, அதாவது, துயருறுவோருடன் துயருறுவது, என்றார்.

இரக்கம் என்பது, தூர நின்று பார்க்கும் ஒரு செயலல்ல, மாறாக, நெருங்கிச் சென்று உண்மை நிலைகளைத் தொடுவதாகும், அதையே, நயீன் கைம்பெண் மகனின் விடயத்தில் இயேசுவும் ஆற்றினார் எனவும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவ்வாறு நெருங்கிச்சென்ற இயேசு, கைம்பெண்ணான அத்தாயின் மகனுக்கு உயிரளித்து, தாயிடமே ஒப்படைத்தது, இறைவனின் குழந்தைகளுக்குரிய மாண்பை நமக்கு மீட்டுத்தர வந்த அவரின் நோக்கத்தை ஒத்ததாக இருக்கிறது என தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, துன்புறும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் குறித்து, பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் பார்க்கும்போது, இவர்களுக்கு நம்மால் என்னச் செய்ய முடியும் என எப்போதாவது கேள்வி எழுப்பியுள்ளோமா என்பது குறித்து சிந்திப்போம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.