2017-09-18 16:42:00

வத்திக்கான் வானொலி முன்னாள் இயக்குனரின் 100வது பிறந்தநாள்


செப்.18,2017. வத்திக்கான் வானொலியின் முன்னாள் தலைமை இயக்குனர் அந்தோனியோ ஸ்டெபனிஸ்ஸி (Antonio Stefanizzi) அவர்கள், செப்டம்பர் 18, இத்திங்களன்று தன் 100வது பிறந்தநாளை சிறப்பித்ததையொட்டி, அவருக்கு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில், குறிப்பாக, அதன் சமூகத்தொடர்புத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டெபனிஸ்ஸி அவர்களுக்கு தன் ஆசீரையும், வாழ்த்தையும் தெரிவிக்கும் திருத்தந்தையின் செய்தி, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வத்திக்கான் வானொலி பணியாளர்கள், மற்றும், திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்தின் சார்பாக, இச்செயலகத்தின் செயலர், அருள்பணி லூச்சியோ ஏட்ரியன் ரூயிஸ் (Lucio Adrian Ruiz) அவர்கள், இத்திங்கள் நண்பகலில், அருள்பணி ஸ்டெபனிஸ்ஸி அவர்களைச் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

1917ம் ஆண்டு, இத்தாலியின் லெச்சே (Lecce) நகரில் பிறந்த அருள்பணி ஸ்டெபனிஸ்ஸி அவர்கள், 1953ம் ஆண்டு முதல், 1967ம் ஆண்டு வரை, 15 ஆண்டுகள், வத்திக்கான் வானொலியின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.

திருத்தந்தையர் 12ம் பயஸ், 23ம் ஜான் மற்றும் 6ம் பால் ஆகியோரின் தலைமைப்பணி காலத்தில் பணியாற்றிய அருள்பணி ஸ்டெபனிஸ்ஸி அவர்கள், உரோம் நகரில் உள்ள புனித கனிசியுஸ் இயேசு சபை இல்லத்தில் தன் 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.