2017-09-18 16:59:00

மன்னிப்பில் கிட்டிய மகிழ்வை, மன்னிப்பதில் பகிர்வோம்


செப்.,18,2017. எப்போதும் மன்னிக்க வேண்டும், ஏனெனில், கடவுளின் சாயலால் படைக்கப்பட்ட மனிதர்கள், அவர்கள் ஆற்றும் தீமைகளைவிட உயர்ந்தவர்கள் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மன்னிப்பு குறித்து, தூய பேதுரு இயேசுவிடம் கேட்டது பற்றியும், அதற்கு இயேசு ஓர் உவமையுடன் பதில் கூறியதைப் பற்றியும் எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இரக்கமுள்ள அரசர், தன் பணியாளரின் பெரும் கடனை மன்னித்திருக்க, அவ்வூழியரோ தன்னிடம் ஒருவர் பட்டடிருந்த சிறு கடனை மன்னிக்க மறுத்தது, அவரை சிறையிலடைக்க காரணமாயிருந்தது என்றார்.

நாம் மனம் வருந்தும்போதெல்லாம் நம் பாவங்களை மன்னித்துவிடும் இறைவன் முன்னால், நாம் நம் சகோதரர்களை மன்னிக்க மறுப்பது தவறு என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவங்கள் மன்னிக்கப்பட்டதால், அமைதியையும், மகிழ்ச்சியையும், உள்மன சுதந்திரத்தையும் பெறும் ஒருவர், மற்றவர்களை மன்னிப்பதன் வழியாக, அவற்றை அவர்களுக்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

'எங்களுக்கு எதிராக தீமைச் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பதுபோல் எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும்' என்ற செபத்தின் வரிகளையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களை நாம் மன்னிக்க மறுப்பது, நம்மை அன்புகூரவும், மன்னிக்கவும் தயாராக இருக்கும் இறைவனை ஏற்க மறுப்பதாகும் எனவும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.