2017-09-18 16:54:00

புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது


செப்.,18,2017. புலம்பெயர்ந்துள்ள சிரியா நாட்டு குழந்தைகளுள் 7 இலட்சத்து முப்பதாயிரம் பேர் கல்வியைத் தொடர முடியாமல், குழந்தை தொழிலாளர் நிலைக்கும், இளம் வயது திருமணங்களுக்கும் தள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வுலகில் புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுள், பாதிப்பேர் கல்வியைத்தொடர முடியா நிலையில் இருப்பதாகக் கூறும் ‘Save the Children' என்ற அமைப்பு, புலம்பெயர்ந்தோர் குழந்தைகளின் கல்வியுரிமை பாதுக்காக்கப்பட உலக அளவிலான முயற்சிகள் தேவை என உரைக்கிறது.

சிரியா நாட்டின் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுள் பாதிபேர், புலம்பெயர்ந்தோராக, கல்வி கற்க முடியா நிலையில், அண்மை நாடுகளில் வாழ்வதாகக் கூறும் இந்த அமைப்பு, இவ்வாண்டின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட மூன்றில் ஒரு பகுதி அதிகம் எனவும் தெரிவிக்கிறது.

வெளிநாடுகளில் வாழும் சிரியா குழந்தைகளுக்கு கல்வி வசதிகள் மேலும் தேவைப்படுவதாகக் கூறும் Save the Children அமைப்பு, போதிய வருமானமின்மை, பெண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம், போதிய போக்குவரத்து வசதிகளின்மை ஆகியவற்றால், புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

நல்லதொரு வருங்காலத்தை குழந்தைகளுக்கு அமைத்துக் கொடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், கல்விக்கூடங்களால் முடியும் எனவும் கூறுகிறது இந்த அனைத்துலக அமைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.