2017-09-18 16:26:00

ஆள்வோருக்காக செபிக்கும்படி திருத்தந்தையின் அழைப்பு


செப்.18,2017. ஆட்சியாளர்கள், அவர்கள் தவறு செய்வோராக இருந்தாலும், அவர்களுக்கு தங்கள் செபத்தின் வழியே உதவ, கிறிஸ்தவர்கள் முன்வருகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, அரசர்களுக்காகவும், உயர் நிலையில் இருப்பவர்களுக்காகவும் செபிக்கும்படி புனித பவுல் திமோத்தேயுவிடம் கூறுவதையும், நூற்றுவர் தலைவனின் ஊழியன் குணம் பெறுவதற்கு மற்றவர்கள் இயேசுவிடம் மன்றாடுவதையும் பற்றிக் கூறும் இன்றைய வாசகங்களை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

ஆள்பவர்களும் செபிக்கவேண்டிய தேவையில் உள்ளனர், இல்லையெனில், அவர்கள் தங்கள் குழுக்களுக்குள்ளேயே முடங்கிவிடுவர் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, தான் ஆள்பவராக இருப்பினும், தனக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்பதை உணரும் ஒவ்வொருவரும் செபத்தின் தேவையை உணர்ந்தவர்கள் என்று கூறினார்.

ஆள்பவர் ஒவ்வொருவரும் சாலமோனைப்போல், நல்ல நிர்வாகத்திற்குரிய ஞானத்தை இறைவனிடம் மன்றாடவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தலைவர்கள் மனச்சான்றுடன் செயல்பட உதவுமாறு இறைவனிடம் வேண்டுவோம் என்று கூறினார்.

ஆள்வோர் அமைதியில் வாழும்போதுதான், குடிமக்களும், அமைதியுடன், சிறப்புடன் வாழமுடியும் என்பதையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஆள்வோர் நல்லமுறையில் செயல்பட குடிமக்களும், குடிமக்களை மனச்சான்றுடன் ஆள தேவையான வரமருள வேண்டுமென ஆள்வோரும் செபிக்கவேண்டியது அவசியம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.