2017-09-16 17:18:00

மத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நேபாள சட்டம்


செப்.16,2017. மத மாற்றத்தை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் சட்டம், நேபாளத்தில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரவுள்ளதையொட்டி தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க சமூகம்.

மதமாற்றம், நற்செய்தி அறிவித்தல் போன்றவற்றை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ள நேபாள அரசு, மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஐந்தாண்டுகள் வரை தண்டனை எனவும், பிறரின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவோருக்கு இரண்டாண்டுகள் வரை தண்டனையும், இரண்டாயிரம் நேபாள ருபாய் அபராதத்தொகை  விதிக்கவும் இப்புதியச் சட்டம் வழிச்செய்கிறது.

2015ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நேபாள ஜனநாயக அரசியலமைப்பில் உறுதிச்செய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்துக்கு எதிராக இப்புதிய சட்டம் செல்வதாக, நேபாள கிறிஸ்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த புதிய சட்டத்தின் வழியாக கிறிஸ்தவ அருள்பணியாளர்களின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படும் என்ற ஆபத்து இருப்பதாக தன் கவலையை வெளியிட்டுள்ளார், நேபாளத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் சிம்மிக்.

இதற்கிடையே, இந்தப் புதிய சட்டம் கிறிஸ்தவர்களை மட்டும் தண்டிப்பதற்கு அல்ல, மாறாக, மதமாற்றத்தில் ஈடுபடும் இந்துவாயினும், புத்த மதத்தவராயினும் அனைவருக்கும் பொதுவானது என உரைத்தார் நேபாள நீதித்துறை அமைச்சர் Agni Kharel.

இச்சட்டம் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட நேபாள கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் C. B. Gahatraj, அவர்கள், கிறிஸ்தவ மதத்தில் சேரவேண்டும் என எவரும் கட்டாயப்படுத்தவில்லை, அதேவேளை, கிறிஸ்தவ மதத்தில் தாங்களாகவே முன்வந்து சேர விரும்பும் மக்களைத் தடுக்கும் உரிமையும் தங்களுக்கு இல்லை என உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.