2017-09-16 16:21:00

பாசமுள்ள பார்வையில்: மனதை அரித்துவிடும் அமிலமான வெறுப்பு


2008ம் ஆண்டு Laura Waters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் Rwandaவைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். Rwandaவில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70,000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

மனதைத் தொடும் பல காட்சிகள், இந்தப் படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும், உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதில் ஆழமாய் பதியும் காட்சி. இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள்.

இந்த ஆவணப் படத்தில் மன்னிப்பைப் பற்றி ஒருவர் சொல்லும் வார்த்தைகள், நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதேபோல், இவர்கள், தங்கள் உள்ளத்திலிருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளியேற்றாமல் இருந்தால், அவை, இவர்களை முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்றமுடியும்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.