2017-09-16 17:22:00

தடுப்புச்சுவர்கள், நீதி, அமைதியின் தோல்விக்கு அடையாளம்


செப்.16,2017. உலக மயமாக்கல் என்ற கொள்கை வேகமாகப் பரவி வரும் இக்காலத்தில், மக்களிடையே பிரிவினைச்சுவர்கள் எழுப்பப்பட்டுவருவது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மூன்றண்டுகளில் மட்டும், சில நாடுகளின் எல்லைகளில் புலம்பெயர்வோரை தடுக்கும் விதமாக, 24 தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், இது, அதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் கூறப்படுள்ளது.

நாடு விட்டு நாடு தஞ்சம் கேட்டு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக்கூறும்  காரித்தாஸ் அமைப்பு, 2016ம் ஆண்டில் மட்டும் 7,927 பேர்  எல்லைகளைக்கடக்கும்போது உயிரிழந்துள்ளதாகவும், அதில் 65 விழுக்காடு மரணங்கள், மத்தியத்தரைக்கடலில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கிறது.

தஞ்சம் கேட்டு நுழைய விரும்பும் மக்களுக்கு எதிராக சுவர்களை எழுப்புவது, நீதி மற்றும் அமைதியின் வீழ்ச்சியைக் குறிப்பதால், இது மனித குலத்திற்கு எதிரானது எனவும் காரித்தாஸ் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் தடுப்புச்சுவருக்கு ஒருபுறம் மக்கள் சுகமான வாழ்க்கை நடத்தும் வேளையில், மறுபுறம், துன்பகரமான சூழலில் பொதுமக்கள் உயிரிழந்து வருவது குறித்தும் கத்தொலிக்க காரித்தாஸ் அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.