2017-09-16 17:11:00

குடும்ப திருப்பயண நிகழ்வுக்கு திருத்தந்தையின் வாழ்த்து


செப்.16,2017. 'மனித குடும்பத்திற்கு, குடும்பங்கள்' என்ற தலைப்பில் இத்தாலியின் பொம்பேய் நகரில் இடம்பெற்ற தேசிய திருப்பயண நிகழ்வுக்கு தன் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் வாழ்த்தையும் ஆன்மீக நெருக்கத்தையும் வெளியிட்டு, அவரது பெயரால் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பொம்பேய் பேராயர் தொம்மாசோ கப்பூத்தோ அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச்செய்தி, 2018ம் ஆண்டு அயர்லாந்தின் டப்ளின் நகரில் இடம்பெறவுள்ள அகில உலக குடும்ப மாநாட்டிற்கு தயாரிப்பாக பொம்பேய் பயணம் இருப்பதாக என்ற திருத்தந்தையின் ஆவலையும் வெளிப்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்புகள் இன்மையால் துன்புறும் குடும்பங்கள், விசுவாசத்திற்காக துயர்களை அனுபவிக்கும் குடும்பங்கள், துன்ப துயர்களை அனுபவிக்கும் குடும்பங்கள் என அனைவருக்கும் செபிக்குமாறும் இச்செய்தியில் திருத்தந்தையின் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

'மனித குடும்பத்திற்கு, குடும்பங்கள்' என்ற தலைப்பில், இத்தாலியின் பொம்பேய் நகரில் இச்சனிக்கிழமையன்று  இடம்பெற்ற திருப்பயணம் மற்றும் கருத்தரங்கில் 10,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.