2017-09-15 16:14:00

உலகில் 81 கோடியே 50 இலட்சம் பேருக்கு போதிய உணவில்லை


செப்.15,2017. இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் போதுமான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், போதிய உணவின்றி வாடும் மக்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருகின்றது என்று, ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

“உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்தின் நிலை 2017” என்ற தலைப்பில், FAO, IFAD, UNICEF, WFP, WHO ஆகிய ஐ.நா. நிறுவனங்கள் முதல்முறையாக, இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016ம் ஆண்டில் 81 கோடியே 50 இலட்சம் பேர் போதிய உணவின்றி துன்புற்றனர் எனவும், ஐந்து வயதுக்குட்ப்பட்ட 15 கோடியே 50 இலட்சம் சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் துன்புறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

2050ம் ஆண்டில், ஆயிரம் கோடியாக அதிகரிக்கவுள்ள மக்கள் தொகை பெருக்கம், நீடித்த நிலையான வளர்ச்சியை உலகு எட்டுவதற்கு பெரும் சவாலாக உள்ளது என்றும், 2050ம் ஆண்டில் உலகில் மக்களுக்கு உணவு கொடுப்பதற்கு, உலக அளவில் உற்பத்தியை இன்னும் ஐம்பது விழுக்காடு அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும், எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதற்கு, உணவுப் பாதுகாப்பு முக்கியம் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் வாடியவர்கள் 2015ம் ஆண்டில் 77 கோடியே 70 இலட்சம் பேர் இருந்தனர், இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டில் 81 கோடியே 50 இலட்சமாக அதிகரித்துள்ளது என்றும் அவ்வறிக்கை எச்சரிக்கின்றது.

உலகில் பசியால் வாடுவோரில் 52 கோடிப் பேர் ஆசியாவில் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.