2017-09-15 15:58:00

மனித உரிமைகள் வேறுபாடின்றி எல்லாருக்கும் வழங்கப்பட வேண்டும்


செப்.15,2017. மனித உரிமைகள் உலகளாவிய தன்மை கொண்டவை மற்றும், இவை எல்லா மனிதருக்கும், எவ்வித வேறுபாடும் இன்றி வழங்கப்பட வேண்டுமென்று, திருப்பீட அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக உழைக்கும் OSCE என்ற நிறுவனம், போலந்து நாட்டின் வார்சா நகரில், மனிதக்கூறுகள் என்ற தலைப்பில் நடத்திவரும் கூட்டத்தில் உரையாற்றிய, பேரருள்திரு Janusz Urbańczyk அவர்கள், நேரம், காலம், இடம் ஆகிய எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்கும் உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மனித உரிமைகள், உலகளாவிய தன்மை கொண்டவை என்றும், இவ்வுரிமைகள் எல்லாருக்கும் இன்றியமையாதவை என்றும், இவை அனைவருக்கும் வழங்கப்படவேண்டும் என்றும், கத்தோலிக்கத் திருஅவையின் சமூகக் கோட்பாட்டு ஏட்டில் கூறப்பட்டுள்ளது என, பேரருள்திரு Urbańczyk அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

வார்சா நகரில் செப்டம்பர் 11ம் தேதி தொடங்கிய இக்கூட்டம், செப்டம்பர் 22ம் தேதி நிறைவடையும். OSCE நிறுவனத்தில், திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றிவரும் பேரருள்திரு Urbańczyk அவர்கள், இக்கூட்டத்தின் தொடக்க நிகழ்வில், இவ்வுரையை ஆற்றினார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.