2017-09-15 16:22:00

பாசமுள்ள பார்வையில்.. அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளையா


காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர். பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின. பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட முற்பட, வாசல் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள். தம்மை பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர், அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார். அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க "என்ன, யாரை பார்க்க வந்தீங்க?"" என்று கேட்டபடி அவரே குழந்தைகளிடம் வந்து விட ... அந்தச் சிறுமி தயங்கி பேசினாள், "உங்களைத் தான் பார்க்க வந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை. உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள்.

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தபடி, "அம்மா தான் அனுப்பிச்சாங்ளா? " என்று காமராஜர் கேட்க, அந்த குழந்தைகளோ "இல்லை அய்யா, நாங்களாகத் தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க. அதுலதான் எங்களை படிக்க வைக்கிறாங்க, என்று சொல்ல, அதற்கு மேல் கேட்க முடியாமல் மாடிக்கு சென்ற அவர், ஒரு கவருடன் வந்தார். அதை சிறுமியிடம் கொடுத்து, "இதில் கொஞ்சம் பணம் இருக்கு. அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க. அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும்", என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர். உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார். "வாங்க வாங்க" என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள், "பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா. அந்த இரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்று காமராஜரிடம் அந்த இரசீதை நீட்டினார்கள். காமராஜர் கண் கலங்கி விட்டார்.

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா? குழந்தைகளை நன்முறையில் வளர்த்துவரும் அத்தாயைக் குறித்து பெருமைப்பட்டார்.

குழந்தைகள் அவரை வணங்கினார்கள். அவரும் குழந்தைகளை வணங்கி, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.