2017-09-15 15:47:00

திருத்தந்தை பிரான்சிஸ் : நமக்கு ஓர் அன்னை இருக்கிறார்


செப்.15,2017. “ஆண்டவர் நம்மை அநாதைகளாக விட்டுவிடவில்லை. நமக்கு ஓர் அன்னை இருக்கிறார். இயேசுவுக்கு இருந்த அதே அன்னை அவர். மரியா, நம்மை எப்போதும் கவனித்துக் கொள்கிறார் மற்றும் நம்மைப் பாதுகாக்கிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியாயின.

புனித வியாகுல அன்னை விழாவான செப்டம்பர் 15 இவ்வெள்ளியன்று, திருத்தந்தை தனது டுவிட்டரில், அன்னை மரியா, நம்மீது கொண்டிருக்கும் அன்பையும், அக்கறையையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலக கல்வியறிவு நாளையொட்டி, யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் செய்தி ஒன்றை அனுப்பினார்.

“டிஜிட்டல் உலகில் கல்வியறிவு” என்ற தலைப்பில், இவ்வுலக நாள் சிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இவ்வுலகம் அதிகம் பயனடைந்துள்ளது என்று அச்செய்தி கூறுகின்றது.

டிஜிட்டல் உலகின் வளர்ச்சி, படிப்படியான முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புக்களை வழங்கின்றபோதிலும், டிஜிட்டல் உலகு வழங்கும் வாய்ப்புக்களை மிகக் குறைந்த அளவே பெறும் மக்கள், சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் எனவும், அச்செய்தி எச்சரிக்கின்றது.

செப்டம்பர் 8, உலக கல்வியறிவு நாள். இந்நாளன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய, யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், உலகில் 75 கோடி வயது வந்தவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் என்றும், ஏறத்தாழ 26 கோடியே 40 இலட்சம் சிறாரும், இளையோரும் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.