2017-09-15 15:35:00

இத்தாலிய தேசிய பொழுதுபோக்கு கழகத்தினருடன் திருத்தந்தை


செப்.15,2017. பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்துபவர்களின் வாழ்வும், தொழிலும் மகிழ்வானதாகும் என்றும், இவர்கள் எல்லா வயதினரையும் மகிழ்ச்சிப்படுத்துகின்றனர் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய தேசிய பொழுதுபோக்கு கழகத்தின் (ANESV) 120 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கழகத்தினரை அன்னை மரியின் பாதுகாவலில் வைப்பதாகவும், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

இப்பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்துபவரின் வாழ்வு, விசுவாசத்தால் தூண்டப்பட்டது என்றும், இந்த விசுவாசத்தால் இவர்கள் குடும்பத்தில் வாழ்கின்றனர் என்றும், இவர்கள் இறைபராமரிப்பில் நம்பிக்கை வைத்து, இறைவனோடு இணைந்து பயணம் செய்கின்றனர் என்றும், கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவர்கள் ஒவ்வோர் இடமாக, வாகனங்களையும், உயிரினங்களையும், ஆட்களையும் கொண்டுசெல்வது சிரமம் என்றும், இந்தச் சிரமமான தொழிலில், இவர்கள் புறக்கணிப்புக்களை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியத் திருத்தந்தை, இவற்றால் சோர்ந்துவிட வேண்டாமெனக் கூறினார்.

இவர்கள் செல்லும் நகரங்களிலும், நாடுகளிலும், பங்குத்தளங்களுக்கும் இவர்களுக்கும் இடையே நிலவும் உறவுகளைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்த ஆன்மீக உறவுகளைத் தொடர்ந்து காக்குமாறும், அருளடையாளங்களைப் பெறுவதற்கும், செபத்திற்கும் நேரத்தை ஒதுக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.