2017-09-13 16:07:00

போரைத் தவிர்ப்பதற்குப் பொறுப்பானவர்களுக்காகச் செபிப்போம்


செப்.13,2017. “போர் என்பது, அனைத்து உரிமைகளுக்கும் மறுப்பு தெரிவிப்பதாகும்.  மக்களுக்கு இடையே போரைத் தவிர்ப்பதற்குப் பொறுப்பானவர்களுக்காகச் செபிப்போம்”  என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருப்பீட சீரமைப்பில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் “C9” என்ற கர்தினால்கள் அவையின் 21வது கூட்டம், செப்டம்பர் 11, இத்திங்களன்று ஆரம்பித்து செப்டம்பர் 13, இப்புதனன்று நிறைவடைந்தது.

வத்திக்கானில் நடைபெற்ற இக்கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த, திருப்பீட செய்தித் தொடர்பாளர் கிரெக் பர்க் அவர்கள், கர்தினால்கள் George Pell, Laurent Monsengwo Pasinya ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரும் இக்கூட்டத்தில் பங்கு கொண்டனர் என்று கூறினார்.

கொலம்பியத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, இத்திங்களன்று வத்திக்கான் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று இக்கூட்டத்தில் பங்கு கொண்டார் என்றும், திருப்பீடத் தூதரகத்தின் பங்கு, அதற்கு தகுதியுடைய மற்றும் திறமையான ஆட்களைத் தேர்வு செய்தல், அருள்பணியாளரைக் குறைத்து, பன்னாட்டு அளவில் ஆட்களைத் தேர்வு செய்தல், இளையோர் மற்றும் பெண்களின் பங்கை அதிகரித்தல் உட்பட பல தலைப்புகள் இடம்பெற்றன என்றும், பர்க் அவர்கள் கூறினார். 

அண்மையில் வெளியிடப்பட்ட Motu Proprio “Magnum Principium” பற்றிய உரையாடல், நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவையின் பணிகள் பற்றிய பகிர்வு, 2016ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி உருவாக்கப்பட்ட பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு பற்றிய புதிய அவையின் செயல்பாடுகள் பற்றிய பகிர்வு போன்றவையும் இக்கூட்டத்தில் இடம்பெற்றன எனவும் பர்க் அவர்கள் தெரிவித்தார்.

மும்பை கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் உட்பட, பல்வேறு நாடுகளைச் சார்ந்த கர்தினால்கள், C9 அவையில் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.