2017-09-13 16:55:00

பூமியின் மூன்றில் ஒரு நிலப்பகுதி மிகவும் தரம்குறைந்துள்ளது


செப்.13,2017. கடந்த முப்பது ஆண்டுகளில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டது, இருமடங்காக அதிகரித்துள்ளதால், இப்பூமிக்கோளத்தின் மூன்றில் ஒரு நிலப்பகுதி மிகவும் தரம்குறைந்து காணப்படுகின்றது என்று, ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

உலகளாவிய நிலம் பற்றிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் சீனாவின் Ordosல் நடைபெற்றுவரும் கூட்டத்தில், நிலங்கள் பாலைநிலங்களாவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் ஐ.நா. அமைப்பின் செயலகம் (UNCCD), இச்செவ்வாயன்று சமர்ப்பித்த அறிக்கையில், இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 1,500 கோடி மரங்களும், 2,400 கோடி டன்கள் வளமான மண்ணும் இழக்கப்படுகின்றன என்றும், நிலங்களை அதிகமாக நம்பி வாழ்கின்ற குறுநில விவசாயிகள், பெண்கள், பழங்குடி இன சமூகங்கள் போன்றோர் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இப்புதிய அறிக்கை கூறுகிறது.

உலகில் மக்கள்தொகை ஒவ்வொரு நாளும் இரண்டு இலட்சம் என்ற வீதத்தில் வளர்ந்து வருகின்றது என்றும், கடந்த 18 மாதங்களில் இருபது நாடுகள் ஏற்கனவே பஞ்ச அவசரகால நெருக்கடியை அறிவித்துள்ளன என்றும், அச்செயலகத்தின் செயல்திட்ட செயலர் Monique Barbut அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.