2017-09-13 16:33:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : கொலம்பிய நகர்களில் கற்றவை


செப்.,13,2017. கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்து கடந்த பல வாரங்களாக புதன் மறைக்கல்வித் தொடரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, தான் அண்மையில் நிறைவேற்றிய கொலம்பிய நாட்டுத் திருத்தூதுப்பயணம் குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். சில நாள்களாக உரோம் நகரில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், இப்புதனன்று வானம் தெளிவாக, இதமான காலநிலையுடன் இருக்க, திருப்பயணிகளும் பெருமெண்ணிக்கையில் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, கொலம்பிய திருத்தூதுப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! திருத்தந்தையர்கள், அருளாளர் 6ம் பவுல், புனிதர் இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் காலடிகளைப் பின்பற்றி, நான் கொலம்பியாவில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம், அந்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடம்பெற்ற, மோதல்களையும் பிரிவினைகளையும் தொடர்ந்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஒப்புரவு நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்க முயற்சிப்பதாக இருந்தது. இந்நாட்டின் குணப்படுத்தல், மற்றும், மீண்டும் கட்டியெழுப்புதல் பணிக்குத் தேவையான ஆன்மீக  வளங்களை இந்நாடு, தன் கிறிஸ்தவ மூலவேர்களில் கண்டுகொள்ள அழைப்பு விடுப்பதாக,  'நாம் முதலடியை எடுத்து வைப்போம்' என்ற இத்திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு இருந்தது. கொலம்பியாவின் பொகோட்டா நகரில் நான் நன்முறையில் வரவேற்கப்பட்டேன், குறிப்பாக, நாட்டின் வருங்காலமாகத் திகழும் இளையோரால். வில்லாவிச்சென்சியோவில் இடம்பெற்ற இரு மறைசாட்சிகளின் முத்திப்பேறுபெற்ற நிகழ்வும், ஒப்புரவு நிகழ்ச்சியும் இதயத்தைத் தொடுவதாக இருந்தன. மெடலின் நகரில், கிறிஸ்தவ சீடத்துவம் மற்றும் மறைப்பணி என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. Hogares பிறரன்பு குழுவினரால் இளையோருக்கு வழங்கப்படும் இல்ல வசதிகள், இயேசுவின் அழைப்புக்கு, தங்கள் குருத்துவம் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வழியாக பதிலளிக்கும் இளையோர், என்ற பின்னணியில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது. கார்த்தஹேனா நகரில், புனிதர்கள் பீட்டர் கிளேவர், மரிய பெர்னார்தா பட்லர் ஆகியோரின் எடுத்துக்காட்டுகளில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனிதகுல மேம்பாட்டிற்கு உழைப்பதற்குமுரிய நம் நற்செய்தி அறிவிப்பு அர்ப்பணம் உறுதிப்படுத்தப்பட்டதைக் கண்டோம். கொலம்பிய நாட்டின் பாதுகாவலரான Chiquinquirá அன்னை மரியின் பரிந்துரையால், அந்நாடு, அன்பு, நீதி மற்றும் உண்மையின் பாதையில் தொடர்ந்து நடைபோடுவதாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.