2017-09-13 16:37:00

அருள்பணி டாம் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பீடம் நன்றி


செப்.13,2017. கடந்த 18 மாதங்களாக இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்திவைக்கப்பட்டிருந்த, இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, தனது நன்றியை தெரிவித்துள்ளது திருப்பீடம்.

2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ஏமன் நாட்டின் ஏடனில், புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் முதியோர் இல்லத்திலிருந்து கடத்தப்பட்ட சலேசிய சபை அருள்பணி டாம் அவர்கள், செப்டம்பர் 12, இச்செவ்வாயன்று ஓமன் நாட்டில் விடுதலை செய்யப்பட்டார்.

அருள்பணி டாம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட செய்தித் தொடர்பகம், அருள்பணி டாம் அவர்களின் விடுதலைக்காக உழைத்தவர்கள், குறிப்பாக, ஓமன் நாட்டு அரசுத்தலைவர் மற்றும் அந்நாட்டின் அதிகாரிகளுக்கு, திருப்பீடம் தனது நன்றியை தெரிவிப்பதாகவும், அருள்பணியாளர் டாம், இந்தியா செல்வதற்குமுன், உரோம் நகரிலுள்ள சலேசிய சபை இல்லத்தில் சில நாள்கள் தங்கியிருப்பார் எனவும் அறிவித்தது.

இவ்விடுதலை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஓமன் நாட்டு Ona செய்தி நிறுவனம், வத்திக்கானின் வேண்டுகோள் மற்றும், ஓமன் நாட்டு சுல்தான் Qabus அவர்களின் வழிகாட்டுதல்களின்படி, மஸ்கட்டிலுள்ள அதிகாரிகள், ஏமன் நாட்டினர் சிலரின் ஒத்துழைப்புடன், அருள்பணி டாம் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவர் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கு உதவினர் என்று அறிவித்துள்ளது.

ஏமனில் போரில் ஈடுபட்டுள்ள எல்லாத் தரப்பினருடனும் சம உறவுகளைக் கொண்டிருக்கும் ஓமன் நாடு, ஏமன் உள்நாட்டுப்போரில் அண்மை ஆண்டுகளில், கடத்தப்பட்ட அல்லது காணாமல்போன பலரின் பாதுகாப்பான விடுதலைக்கு உதவியுள்ளது என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.    

செப்டம்பர் 13, இப்புதனன்று, சலேசிய சபையின் அனைத்து இல்லங்களிலும் நன்றித் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

58 வயது நிரம்பிய, கேரளாவைச் சேர்ந்த, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், ஏமனில் மறைப்பணியாற்றி வந்தார். இவர் மறைப்பணியாற்றிய பங்கு ஆலயம், குண்டுவீச்சால் சேதமடைந்ததையொட்டி, ஏடனில், அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் முதியோர் இல்லத்தில் தங்கி மறைப்பணியாற்றி வந்தார்.  இஸ்லாம் தீவிரவாதிகள், 2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, அந்த முதியோர் இல்லத்தைத் தாக்கியதில் அன்னை தெரேசா சபையின் நான்கு அருள்சகோதரிகள் மற்றும் 12 பேர் கொல்லப்பட்டனர். அச்சமயம் இவரும் கடத்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.