2017-09-12 16:03:00

பாலியல் துன்புறுத்தல்களைத் தடைசெய்ய இந்திய ஆயர்கள்


செப்.12,2017. திருஅவை நடத்தும் நிறுவனங்களில், பாலியல் முறையில், குறிப்பாக, பெண்கள் பாலியல்முறையில் துன்புறுத்தப்படுவதைத் தடுத்து, அது குறித்து நடவடிக்கை எடுக்க உதவும் ஏடு ஒன்றை இந்திய ஆயர்கள் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 “பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்குத் தீர்வுகாணும் CBCIன் வழிமுறைகள்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஏடு, செப்டம்பர் 14, வருகிற வியாழனன்று, புதுடெல்லி, CBCI என்ற, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை மையத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.

பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பளித்து மதிக்கப்படுவதை விரும்பும் அதேவேளை, பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவது குறித்து அக்கறையின்றி இருப்பதை, திருஅவை விரும்பவில்லை என்றும், பணியிடங்களில் அனைத்துவிதமான பாலியல் தொல்லைகளையும் ஒழிப்பதற்கு திருஅவை விரும்புகின்றது என்றும், CBCIன் பெண்கள் அவை கூறியது.

இந்திய தேசிய வழக்கறிஞர் கழகம், இவ்வாண்டு ஆரம்பத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பணியிடங்களில் 38 விழுக்காட்டுப் பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும், இவர்களில் 68.9 விழுக்காட்டினர் புகார் அளிக்கப் பயந்து, மௌனமாக அதைத் தாங்கிக் கொள்கின்றனர் என்றும் தெரிய வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.