2017-09-12 15:33:00

திருத்தந்தை பிரான்சிஸ் விமானப் பயணத்தில் நேர்காணல்


செப்.12,2017. குடும்பங்களிலிருந்து இளையோரைப் பிரிப்பது தவறானது, இவ்வாறு பிரிப்பது, குடும்பங்களுக்கும், இளையோருக்கும் என்ற, இரு தரப்பினருக்குமே நன்மை பயக்காது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறினார்.

கொலம்பியாவில் தனது இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, கார்த்தஹேனா நகரிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பி வந்த விமானப் பயணத்தில், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

வெளிப்புற காலநிலை காரணமாக விமானம் குலுங்கிக்கொண்டு சென்றதால், இந்நேர்காணலின் நேரம் குறைக்கப்பட்டாலும், ஊழல், காலநிலை மாற்றம், மக்களின் குடிபெயர்வு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடிபெயர்வு கொள்கை, வெனெசுவேலா நாட்டில் தொடர்ந்து நிலவும் நெருக்கடி உட்பட, இன்றைய உலக விவகாரங்கள் குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு திருத்தந்தை பதிலளித்தார்.

கொலம்பியத் திருத்தூதுப் பயணம் குறித்து, கொலம்பியச் செய்தியாளர்கள் முதலில் திருத்தந்தையிடம் கேள்வி கேட்டனர்.

பல ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் கொலம்பியாவில் நிலவும் பிரிவினைகள் மற்றும் காழ்ப்புணர்வுகள் களையப்படுவதற்கு அந்நாட்டினர் எடுக்கவேண்டிய தெளிவான நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, “கொலம்பியர்கள், இரண்டாவது அடியை எடுத்து வைக்கட்டும்”என்று கூறினார். “முதல் அடியை எடுத்து வைப்போம்”என்ற இத்திருத்தூதுப் பயண இலக்கை குறிப்பிட்டு இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உள்நாட்டுச் சண்டை இடம்பெற்ற ஆண்டுகளில் ஆற்றப்பட்ட பாவங்கள் ஆன்மாக்களை நோயுற்றவைகளாக மாற்றியுள்ளன, இருந்தபோதிலும், மக்கள் அமைதியை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

வன்முறையைவிட ஊழல் ஒரு நாட்டை மிகவும் சீரழிக்கும், ஊழலும் ஒருவகையான பாவம், ஊழல் செய்பவர் மன்னிப்புக் கேட்பதற்கே சோர்வடைந்து விடுகிறார், எப்படி மன்னிப்புக் கேட்பதென்பதையே மறந்து விடுகிறார், இதனால் ஊழல் செய்பவருக்கு உதவுவது கடினம், ஆனால் கடவுளால் இயலும், நானும் செபிக்கின்றேன் என்று சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், குடிபெயர்வு மக்கள் குறித்து அண்மையில் எடுத்துள்ள தீர்மானம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு, போதுமான அளவு அத்தீர்மானத்தை தான் வாசிக்கவில்லை என்றும், எனினும், குடும்பங்களிலிருந்து இளையோரைப் பிரிப்பது குடும்பங்களுக்கும், இளையோருக்கும் நன்மை பயக்காது என்றும் கூறினார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக பிற நாடுகளுடன் ஒத்துழைக்காத மக்கள், இம்மாற்றம் பற்றித் தெளிவாகவும், துல்லியமாகவும் பேசும் அறிவியலாளர்களிடம் செல்ல வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.