2017-09-12 15:40:00

கொலைகளால் ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியாது, கர்தினால் தாக்லே


செப்.12,2017. பிலிப்பீன்ஸ் நாட்டில், அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தெ அவர்கள் மேற்கொண்டுள்ள போதைப்பொருள் தொடர்பான கடுமையான மற்றும் தளராத நடவடிக்கையில், மனிதர் கொலைசெய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

மனித உயிர்கள் அழிக்கப்படுவது ஒரு சாதாரண செயலாக மாறி வருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கொலைகளால் நாம் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது என்றும், மனிதம்மிக்க மற்றும் தரமான பிலிப்பீன்ஸ் கலாச்சாரத்தை கொலைகளால் நாம் வளர்க்க இயலாது என்றும், அன்னை மரியா பிறப்பு விழாவுக்கென கர்தினால் தாக்லே அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இக்கொலைகளுக்குப் பின்னால் இருந்து இயக்குபவர்கள், நன்மையை ஆற்றி தீமையை விலக்க நமக்கு அழைப்பு விடுக்கும் மனச்சான்று மற்றும் கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டுமென்றும், கர்தினாலின் அறிக்கை வலியுறுத்துகிறது.  

மேலும், மனிலா பல்கலைக்கழகப் பேராசிரியரான இயேசு சபை அருள்பணி ஆல்பர்ட் அலெஹோ அவர்கள், பீதேஸ் செய்தியிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசுகையில், அரசுத்தலைவர் துத்தெர்த்தெ அவர்களின் நடவடிக்கையால், ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.

தொடர்ந்து கொலைசெய்யும் ஓர் அரசுத்தலைவரை நாடு கொண்டிருக்கின்றது என்றும், நாடு, தேசிய கொலையாளியாக மாறி வருகின்றது என்றும் கூறிய அருள்பணி அலெஹோ அவர்கள், அந்நாட்டு வரலாற்றின் இருள்நிறைந்த காலங்களில் ஒன்றான, சர்வாதிகாரி மார்க்கோஸ் காலத்தில் இடம்பெற்றதையும் நினைவுகூர்ந்தார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில், போதைப்பொருள் தொடர்பான விவகாரத்தில், சட்டத்திற்குப் புறம்பே, ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய ஆயிரம் கொலைகள் வீதம் இடம்பெறுகின்றன எனச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.