2017-09-11 15:28:00

கார்த்தஹேனாவில் திருத்தந்தையின் மூவேளை செப உரை


செப்.11,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, புனித பீட்டர் கிளேவரின் புனிதப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ள இக்கோவிலுக்கு வருமுன், வறியோருக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் கட்டப்படும் இரு கட்டடங்களின் அடிக்கல்லை ஆசீர்வதித்தேன்.

நாம் மூவேளை செபத்தை செபிக்கும் ஒவ்வொரு நேரமும், வார்த்தை மனுவுருவானதை நினைவில் கொணர்ந்து, இயேசுவை, கருவில் தாங்கிய அன்னை மரியாவைக் குறித்து தியானிக்கிறோம். இங்கு நாம் அன்னை மரியாவை, Chiquinquirá அன்னையாக காண்கிறோம். இந்த அன்னையின் திருவுருவம் தாங்கியத் துணி, கைவிடப்பட்ட நிலையில், நிறம் மங்கிப்போய், ஓட்டைகள் கொண்டதாக பல ஆண்டுகளாக இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஏதோ ஒரு பழைய கந்தல் துணிபோல், எவ்வித மரியாதையும் இன்றி, அது தூர வீசப்பட்டிருந்தது. இந்த வேளையில்தான், மரியா இராமோஸ் (Maria Ramos) என்ற பெண்மணி, இந்தத் துணியின் மகத்துவத்தை அறிந்தார். அதனை அதற்குரிய இடத்தில் வைத்து பாதுகாத்தார். அதன் மாண்பைக் காப்பாற்றினார். ஆம், நம் சகோதர, சகோதரிகளை மீட்டு, அவர்களை நல்ல நிலையில் இருத்த நாம் ஆற்றவேண்டிய பணிக்கு, மரியா இராமோஸ் அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார். அதேவேளை, இந்தத் துணியின் தெய்வீக ஒளிக்கதிர்களைக் காணும் முதல் பேறு, பழங்குடியினத்தைச் சேர்ந்த இஸபெல்லாவுக்கும், அவரது மகன், மிகுவேலுக்கும் கிடைத்தது. அவர்கள் அன்னை மரியாவின் திருவுருவ மகிமையை அறிந்துகொண்டது மட்டுமல்ல, அவ்வன்னையின் அழகு மற்றும் புனிதத்துவம் குறித்து மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மறைப்பணியாளர்களாக, முன்னோடிகளாக மாறினர்.

இந்தக் கோவிலில் நாம் அன்னை மரியாவை நோக்கியும், கறுப்பின மக்களின் அடிமை என்று தன்னையே அறிவித்துக்கொண்ட புனித பீட்டர் கிளேவரை நோக்கியும் செபிக்கிறோம். அடிமைகள் விற்பனை செய்யப்பட்ட இடமாக திகழ்ந்த இங்கு, கறுப்பின மக்களிடையே பணியாற்றிய புனித பீட்டர் கிளேவருக்கு அவர்கள் பேசிய மொழி தெரியவில்லை எனினும், அவரது பிறரன்பு மற்றும் இரக்கத்தின் மொழிகளை, அடிமைகளாக வந்து சேர்ந்தவர்கள் புரிந்துகொண்டனர்.

பிறரன்பின் வழியாக, உண்மையும், உண்மை வழியே, அன்பின் செயல்பாடுகளும் பிறக்கின்றன. இவை இரண்டும் பிரிக்கமுடியாதவை. அடிமைகளின் துயர் உணர்ந்து, அவர்களின் காயங்களை முத்தமிட்டார், புனித கிளேவர். பல ஆயிரக்கணக்கான அடிமைகளுக்குப் பணியாற்றிய புனித பீட்டர் கிளேவர், தன் வாழ்வின் பிற்பகுதியில், எவ்வித மதிப்பும், மரியாதையுமின்றி, தனிமையில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதுவே, இவ்வுலகம் அவருக்குத் தந்த பதிலுரை. ஆனால், கடவுளோ அவரை வேறு விதமாக கவுரவித்தார்.

ஒருவர் ஒருவர் மீது கொள்ளவேண்டிய அக்கறை, மற்றும் பொறுப்புணர்வின் சாட்சியாக புனித பீட்டர் கிளேவர் விளங்கினார். பணம்கொழிக்கும் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தோர், இவர்மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்தபோதும், இவர் கலங்கி, பின்வாங்கவில்லை. இன்று, கொலம்பியாவிலும், இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் அடிமைகளாக வர்த்தகம் செய்யப்படுகின்றனர். தங்கள் மாண்பையும், உரிமைகளையும் இழந்து, தப்பியோடிக்கொண்டிருக்கும் இம்மக்கள், நம் புரிந்துகொள்ளுதலுக்கும், அக்கறைக்கும் அழைப்பு விடுக்கின்றனர். இம்மக்களின் மாண்பு காக்கப்படவேண்டும் என, Chiquinquirá அன்னை மரியாவும், புனித பீட்டர் கிளேவரும் நமக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

ஏழைகள், சமுதாயத்தில் ஓரம்தள்ளப்பட்டோர், கைவிடப்பட்டோர், குடியேற்றதாரர்கள், வன்முறைக்கு உள்ளானோர், மனித கடத்தல்களால் பாதிக்கப்பட்டோர் என, அனைவருக்கும் மனித மாண்பு உள்ளது. ஏனெனில், அனைவருமே இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அன்னை மரியா, நம் ஒவ்வொருவரையும் குழந்தைகளாக தன் கரங்களில் தாங்கியுள்ளார்.

நான் இப்போது, இலத்தீன் அமெரிக்காவின் ஒவ்வொரு நாட்டிற்காகவும் செபிக்கிறேன். அதிலும், சிறப்பான விதத்தில், வெனெசுவேலா நாட்டிற்காக. அன்புக்குரிய அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்காகவும், கொலம்பியாவில் அடைக்கலம் தேடியுள்ள வெனெசுவேலா நாட்டினருக்காகவும் செபிக்கிறேன். மனித உரிமைகளின் நகரமாக அறியப்படும் இங்கிருந்து, நான் விடுக்கும் அழைப்பு என்னவெனில், அரசியல் அரங்கிலிருந்து வன்முறைகளைக் களையுங்கள். தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணுங்கள். ஏனெனில், பாதிக்கப்படுவோர், ஏழைகளும், சமுதாயத்தில் ஓரம் தள்ளப்பட்டோரும் என்பதை, நினைவுகொள்ளுங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.