2017-09-11 15:51:00

கார்த்தஹேனா புனித பீட்டர்கிளேவர் திருத்தலத்தில் திருத்தந்தை


செப்.11,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில் பயணத் திட்டங்களை  நிறைவேற்றிய தலைநகர் பொகோட்டா, வில்லாவிச்சென்சியோ, மெடெலின், கார்த்தஹேனா ஆகிய நான்கு நகரங்களுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருத்தந்தை கடைசியாக திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட கார்த்தாஹேனா நகரம், கொலம்பியாவின் வடக்கில், கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம், இஸ்பானிய காலனி ஆதிக்க காலத்தில், 1533ம் ஆண்டில் முக்கிய துறைமுக நகரமாக உருவாக்கப்பட்டது. முதலில் கார்த்தஹேனா தெ இன்டியாஸ் (Cartagena de Indias) என அழைக்கப்பட்ட இந்நகரத்தை, 275 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்பானியர்கள் ஆட்சி செய்தனர். கி.மு.நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இந்நகரில் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இஸ்பெயின் நாட்டின் கார்த்தஹேனா பெயரே, இந்நகருக்கும் சூட்டப்பட்டது. பின் இதன் பெயரில், ஆப்ரிக்காவின் டுனிசியாவில் கார்த்தேஜ் நகரம் பெயரிடப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஆப்ரிக்க அடிமை வர்த்தகத்திற்கும், பெரு நாட்டிலிருந்து வெள்ளி இறக்குமதி செய்வதற்கும் கொலம்பியாவின் கார்த்தஹேனா நகரம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 11 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் அடிமைகளாக, கப்பல்களின் கீழ்தளத்தில் அடைக்கப்பட்டு கார்த்தாஹேனாவுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விற்கப்பட்டனர். 16ம் நூற்றாண்டில் இடம்பெற்ற இந்த கறுப்பின அடிமை வர்த்தகத்தை, திருத்தந்தையர் 3ம் பவுல், 8ம் உர்பான் ஆகிய இருவரும், திருத்தந்தையரின் ஆணை வழியாகத் தடைசெய்தாலும், இந்த அடிமை வர்த்தகம், இஸ்பானிய காலனி அரசுக்கு, பெரிய தொழிலாக அமைந்து, அதிக வருவாயை ஈட்டித்தரும் வர்த்தகமாக இருந்துவந்தது. இந்நகரில்தான், செப்டம்பர் 10, இஞ்ஞாயிறன்று திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுச் சண்டையால் நலிவுற்றுள்ள கொலம்பியாவில், ஒப்புரவு, மன்னிப்பு, அமைதி, மீண்டும் சீரமைப்பு என, கடந்த நான்கு நாள்களாக குரல் கொடுத்துவந்த திருத்தந்தை, என்றென்றும் அமைதியின் அடிமைகளாக இருங்கள் என, கார்த்தஹேனாவில், கொலம்பிய மக்களுக்கு அழைப்பு விடுத்தது இந்நகரின் கடந்தகால வரலாற்றை நினைவுபடுத்துவதாக உள்ளது.

உண்மையை அறிவதற்கு பிறரன்பு நமக்கு உதவுகின்றது. உண்மை, கனிவன்பின் செயல்களுக்கு அழைப்பு விடுக்கின்றது என, இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் கார்த்தஹேனா நகர் புனித அசிசி நகர் பிரான்சிஸ் வளாகத்தில் திறந்த காரில் வந்து மக்களை ஆசீர்வதித்தார். இவ்வாறு வந்தபோது ஒரு குழந்தையை முத்தமிட்டு ஆசீர்வதிப்பதற்காக தன் வாகனத்திலிருந்து தலையை நீட்டியபோது திருத்தந்தை அதில் மோதியதில், இடது கண்புருவத்திலும், அதற்குக் கீழும் இலேசாக காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்திருந்ததை அவரது வெண்ணிற ஆடையில் எளிதாகக் காண முடிந்தது. உடனே அந்த இடத்தில் சிறிய பனிக்கட்டியை வைத்து பிளாஸ்டர் போட்டார்கள். அதன்பின் எவ்விதச் சோர்வுமின்றி திருத்தந்தை தன் பயண நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆற்றினார் திருத்தந்தை. இந்த வளாகத்தில், தலித்தா கும் எனப்படும், மனித வர்த்தகத்திற்கு எதிராக, உலகளாவிய பெண் துறவு சபையினர் அமைப்பு நடத்தும் பணிக்குரிய புதிய கட்டடங்களுக்கு இரு மூலைக்கற்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை. வீடற்றவர்கள், இந்த அமைப்பு உதவிசெய்யும் சிறுமிகள் உட்பட, நூற்றுக்கணக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தப் பிறரன்புப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள எல்லாருக்காகவும் செபித்தார் திருத்தந்தை. பின் அதற்கு அருகிலுள்ள 77 வயது நிரம்பிய லொரென்சா என்ற பெண்ணின் வீட்டிற்குச் சென்றார் திருத்தந்தை. லொரென்சா அவர்கள், தலித்தா கும் அமைப்பின் காபி கடையில், தன்னார்வலராக ஐம்பது ஆண்டுகள் பணியாற்றியவர்.

இந்நிகழ்வுக்குப்பின், அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்று, இயேசு சபை அருள்பணியாளரான, புனித பீட்டர் கிளேவர் திருத்தலம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கார்த்தஹேனா நகருக்கு 1604ம் ஆண்டில் வந்து மறைப்பணியை ஆரம்பித்த இயேசு சபையினர் இந்த ஆலயத்தைப் பராமரித்து வருகின்றனர். அடிமைகளின் பாதுகாவலரும், கொலம்பியாவின் பாதுகாவலருமான இப்புனிதரின் திருப்பண்டத்தின் முன் சிறிது நேரம் செபித்தார் திருத்தந்தை. இஸ்பானியரான புனித பீட்டர் கிளேவர், இவர், தனது இருபதாம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். புனித அல்போன்ஸ் ரொட்ரிகெஸ் அவர்களின் தூண்டுதலால்,  1610ம் ஆண்டில் ஆப்ரிக்க அடிமைகள் மத்தியில் பணியாற்றுவதற்காக, கொலம்பியாவின் கார்த்தஹேனாவுக்கு வந்தார். ஆண்டுக்கு பத்தாயிரம் கறுப்பின அடிமைகள் வீதம், இந்த நகருக்குக் கொண்டுவரப்பட்டனர். இந்த அடிமைகளுக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் நற்சேவையாற்றினார் இப்புனிதர். ஏறத்தாழ 3 இலட்சம் மக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவவும் இவர் காரணமானார். இவர் அடிமைகளுக்கு மட்டுமன்றி, ஏனைய செல்வந்தருக்கும், முஸ்லிம்களுக்கும் ஆன்மீக உதவிகள் செய்தார். இப்புனிதரின் விழாவான செப்டம்பர் 9ம் தேதியை, கொலம்பிய நாடு, தேசிய மனித உரிமைகள் நாளாக அறிவித்து சிறப்பித்து வருகிறது இந்தப் புனிதரின் திருத்தலத்தில், ஞாயிறு மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பீட்டர் கிளேவர் திருத்தலத்தோடு அமைந்துள்ள இயேசு சபை இல்லத்தில், தன் இயேசு சபை சகோதரர்களைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. பின், அங்கிருந்து சாந்தோ தொமிங்கோ ஆலயம் மற்றும் துறவு இல்லம் சென்று அங்கு மதிய உணவருந்தினார். சாந்தோ தொமிங்கோ துறவு இல்லம், 1533ம் ஆண்டில் தொமினிக்கன் துறவு சபையினர் கார்த்தஹேனாவுக்கு வந்து ஆரம்பித்த முதல் துறவு இல்லமாகும். 19ம் நூற்றாண்டில் அச்சபையினர் அங்கிருந்து சென்றுவிட, தற்போது அந்த இல்லத்தை அந்நகர் உயர்மறைமாவட்டம் பராமரித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.