2017-09-11 15:58:00

கார்த்தஹேனாவில் திருத்தந்தை திருப்பலி


செப்.11,2017. செப்டம்பர் 10, இஞ்ஞாயிறு மாலை 4.30 மணிக்கு கார்த்தஹேனா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி மேடையில் புனித பீட்டர் கிளேவர், புனித மரிய பெர்னார்தா பட்லர் ஆகிய இருவரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. இத்திருப்பலியில் பங்குகொண்ட ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்களுக்கு திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், ஒவ்வொருவரின் மனித மாண்புக்காக, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிந்தோரின் மாண்புக்காக உழையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இத்திருப்பலியின் இறுதியில், இப்பயணம் சிறப்புற அமைய, தங்கள் கடின உழைப்பாலும், தியாகத்தாலும் உதவிய எல்லாருக்கும், குறிப்பாக, கொலம்பிய அரசுத்தலைவர் ஹூவான் மானிவேல் சாந்தோஸ் மற்றும், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த நாள்கள், மிகவும் உள்ளார்ந்ததாக மற்றும் அழகான நாள்களாக அமைந்திருந்தன. பல அனுபவங்கள் என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன. கொலம்பியர்கள் முதல் அடியை எடுத்து வைப்பதோடு திருப்தியடையாமல், ஒவ்வொரு நாளும் வாழ்வுப் பாதையை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். ஏனையோரைச் சந்தித்து நல்லிணக்கத்தையும், உடன்பிறப்பு உணர்வையும் ஊக்குவிக்க வேண்டும். இறுதியாக ஒரு விண்ணப்பம். கொலம்பிய நாடே, உனக்கு, உன் சகோதர சகோதரிகள் தேவைப்படுகின்றனர். அமைதி, வன்முறையற்ற சுதந்திரம் இவற்றை அவர்களுக்கு அளிப்பாயாக. கொலம்பிய மக்களே, என்றென்றும் அமைதியின் அடிமைகளாக இருங்கள் என இருமுறை சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலிக்குப்பின், கார்த்தஹேனா Rafael Nunez விமான நிலையம் சென்று, அதிகாரப்பூர்வ பிரியாவிடை பெற்று உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.