2017-09-10 13:21:00

மெடெலினில், சிறார் இல்ல, குருத்துவ, துறவறத்தார் சந்திப்பு


செப்.10,2017. கொலம்பியாவின் மெடெலின் விமானநிலையத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், அந்நகரின் புனித யோசேப்பு சிறார் இல்லம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு நடந்த சந்திப்பில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய, அவ்வில்ல இயக்குனர் பேரருள்திரு Armando Santamaría, சிறுமி Claudia Yesenia ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தார். துன்புறுவோரை, குறிப்பாக துன்புறும் சிறாரை இயேசு ஒருபோதும் கைவிடுவதில்லை என்று ஆறுதலளித்தார் திருத்தந்தை. இச்சிறார் இல்லத்தில் உரையும் ஆற்றினார் திருத்தந்தை.

கொலம்பியாவில் ஆரம்பப்பள்ளி வயதுடைய சிறாருக்கென மூன்று இல்லங்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்க்கென ஓர் இல்லம் மற்றும், 2 முதல் 5 வயது வரையுள்ள சிறார்க்கு ஓர் இல்லம் என, ஐந்து சிறார் மையங்களை புனித யோசேப்பு சிறார் அமைப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்பு, 630 சிறாருக்கு நலவாழ்வு மற்றும் கல்வியை வழங்கி வருகிறது. நூறு ஆண்டுகளுக்குமுன் நிறுவப்பட்ட இச்சிறார் இல்லங்களில், ஆயுத மோதல்கள் மற்றும் கடும் வறுமையால் பெற்றோரை இழந்து கைவிடப்பட்ட சிறார் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வில்லத்தில் பரிசுப்பொருள்களைக் கொடுத்து, சிறாரை அரவணைத்து முத்தமிட்டு ஆசீர்வதித்து, பின் அங்கிருந்து திறந்த காரில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று, மெடெலின் நகரின் Macarena பொழுதுபோக்கு மையம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அருள்பணியாளர்கள், இருபால் துறவிகள், குருத்துவ மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என, ஏறத்தாழ 12 ஆயிரம் பேர் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர்.

இச்சந்திப்பில், முதலில் ஓர் அருள்பணியாளர், அடைப்பட்ட துறவு இல்ல ஓர் அருள்சகோதரி, ஒரு குடும்பத்தினர் என, மூவர் இறையழைத்தல் பற்றிச் சாட்சியங்கள் கூறினர். இவர்கள் கூறியதைக் கேட்ட திருத்தந்தை, தான் தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்நேரத்தில் தன் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வு நடைபெற்ற மேடையில், கொலம்பியாவின் முதல் பெண் புனிதரான மதர் Laura Montoya அவர்களின் திருப்பண்டம் வைக்கப்பட்டிருந்தது. கொலம்பியாவில் 1895ம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் பள்ளிகள் கட்டாயமாக மூடப்பட்டன. அச்சமயத்தில் தனது சொந்த இல்லத்தில் வகுப்புக்களை நடத்திய ஆசிரியர் புனித மதர் லவ்ரா. இவரை 2013ம் ஆண்டில் புனிதராக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இச்சந்திப்பை நிறைவுசெய்து, 4.2 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் மெடெலின் Enrique Olaya Herrera விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் Rionegro சென்று, பின் அங்கிருந்து, விமானத்தில் பொகோட்டா CATAM இராணுவ விமானநிலையம் சென்றார் திருத்தந்தை. அங்கிருந்து, காரில் சென்று திருப்பீடத் தூதரகம் சென்றார். துறவற மற்றும் திருமண வாழ்வில், வெள்ளி விழா மற்றும் பொன் விழா காணும் பலரை அங்குச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் சனிக்கிழமை பயண நிகழ்வுகள் நிறைவடைந்தன.

ஒப்புரவு என்பது, அநீதிகளை நியாயப்படுத்துவது அல்ல, மாறாக, ஏனையோருக்குக் கதவுகளைத் திறந்து விடுவதாகும். காழ்ப்புணர்வு, பழிவாங்கும் உணர்வு ஆகிய தொடர் சங்கிலிகளை அறுத்தெறியுங்கள். மன்னிப்பு மற்றும் ஒப்புரவை அணிந்து கொள்ளுங்கள். வாழ்வில் எது இன்றியமையாததோ அதனை முதலில் தேடுங்கள். வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். செய்வது அனைத்திலும் கிறிஸ்துவை வெளிப்படுத்துங்கள்    என கொலம்பிய மக்களுக்குச் சொல்லி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். கொலம்பியத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, இத்திங்கள் பிற்பகலில் வத்திக்கான் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். அத்துடன் அவரின் இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமும் நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.