2017-09-10 13:03:00

கொலம்பியாவின் மெடெலினில் திருத்தந்தையின் திருப்பலி


செப்.10,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், செப்டம்பர் 07, இவ்வியாழன் முதல் பயண நிகழ்ச்சிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இப்பயணத்தில் திருத்தந்தை சென்ற இரண்டாவது நகரமான வில்லாவிசென்சியோவில், இவ்வெள்ளிக்கிழமை பயண நிகழ்வுகளை ஆரம்பித்தவேளை, கொலம்பியாவின் முன்னாள் முக்கிய புரட்சிக்குழுவான FARC அமைப்பின்  தலைவர் Rodrigo Londono அவர்கள், தனது புரட்சிக்குழு இழைத்த அனைத்துத் துன்பங்களுக்கும் திருத்தந்தையிடம் மன்னிப்புக் கேட்டு திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். வில்லாவிசென்சியோ நகரம், கொலம்பியாவில், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரின் முக்கிய இடமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போரில் 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். எழுபது இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்தனர். இவ்வெண்ணிக்கை, உலகிலே அதிகமான புலம்பெயர்வாக இருந்தது எனச் சொல்லப்படுகிறது. வில்லாவிசென்சியோ நகரில், திருத்தந்தை தேசிய ஒப்புரவு நிகழ்வுகளை நிறைவேற்றி, கொலம்பிய மக்கள் பகைமை உணர்வுகளைக் கைவிட்டு, மனம்வருந்தி திரும்பிவரும் மக்களை மன்னித்து ஒப்புரவுக்குத் தங்களைக் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இவ்வெள்ளி இரவு பொகோட்டா திருப்பீடத் தூதரகத்தில் உறங்கச் செல்வதற்குமுன், அத்தூதரகத்திற்குமுன் கூடியிருந்த முன்னாள் புரட்சிக்குழு உறுப்பினர்கள், வன்முறைக்குப் பலியானவர்கள் மற்றும், படைவீரர்களை வாழ்த்தி, ஆசீர்வதித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 09, இச்சனிக்கிழமை பயணத் திட்டங்களை நிறைவேற்றிய மெடெலின் (Medellín) நகரமும் கொலம்பியா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்புடைய இடம். மெடெலின், மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். 1616ம் ஆண்டில் ஒரு சிறிய பழங்குடியின கிராமமாக உருவாக்கப்பட்ட இந்நகரில்தான், உலகில் மிகவும் பிரபலமாக இருந்த போதைப்பொருள் வர்த்தகர் Pablo Emilio Escobar Gaviria தனது தொவிலை நடத்தினார். கொக்கெய்ன் போதைப்பொருள் மன்னர் என அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைந்த போதைப்பொருள்களில் 80 விழுக்காட்டை அனுப்பி, பெரும் பணக்காரராக இருந்தார். இவர் தனது 44வது வயதில் 1993ம் ஆண்டு டிசம்பரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மெடெலின் நகரின் Enrique Olaya Herrera விமானநிலையத்தை, உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை. அவ்விமானநிலையத்தில் திருத்தந்தை நிறைவேற்றவிருந்த திருப்பலிக்காக, கொட்டும் மழையிலும், மழைக்குரிய மற்றும் அமைதியின் அடையாளமாக வெண்மை நிறத்திலும் ஆடைகளை அணிந்துகொண்டு ஏறத்தாழ பத்து இலட்சம் விசுவாசிகள் காத்திருந்தனர். இவர்கள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து திருப்பலி மேடைக்குச் சென்று திருப்பலியைத் தொடங்கிய திருத்தந்தை, இங்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டார். Rionegro நகரிலிருந்து கெலிகாப்டரில் இங்கு வரவிருந்தவேளை, மழையின் காரணமாக, காரில் வரவேண்டியிருந்ததே இதற்கு காரணம் என்று சொல்லி திருப்பலியைத் தொடங்கினார்.

இலத்தீனிலும், இஸ்பானியத்திலும் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில்,  கொலம்பிய மக்கள் ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்வதில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும், வன்முறையற்ற அகிம்சா, ஒப்புரவு மற்றும் அமைதியின் செயல்களை தழுவிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆப்ரிக்க கறுப்பு இன அடிமைகளின் திருத்தூதராகப் போற்றப்படும், இயேசு சபை அருள்பணியாளர் புனித பீட்டர் கிளேவர் அவர்களின் நினைவாக இத்திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.இப்புனிதரின் விழா செப்டம்பர் 9.  கத்தோலிக்கர் அதிகமாக வாழ்கின்ற மெடெலின் நகரில் நிறைவேற்றிய இத்திருப்பலிக்குப்பின், அந்நகர் குருத்துவ கல்லூரியில் மதிய உணவு உண்டார் திருத்தந்தை. பின், உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு, மெடெலின் நகரின் புனித யோசேப்பு சிறார் இல்லம் (Hogar San José)  சென்றார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.