2017-09-10 14:01:00

கர்தினால் தெ பவ்லிஸ் மரணம், திருத்தந்தை இரங்கல்


செப்.10,2017. திருப்பீட பொருளாதாரத்துறையின் முன்னாள் தலைவர், சிறந்த பேராசிரியர் மற்றும் திருஅவை சட்டத்தில் நிபுணருமான கர்தினால் வெலாசியோ தெ பவ்லிஸ் அவர்கள் மரணமடைந்ததை முன்னிட்டு, தனது இரங்கல் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால் வெலாசியோ தெ பவ்லிஸ் அவர்களின் சகோதரர் ஆஞ்சலோ தெ பவ்லிஸ் அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், இரங்கல் தந்திகளை அனுப்பி, கர்தினால் அவர்களின் குடும்பத்தினருக்கு தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளனர். மேலும், திருஅவைக்கு, குறிப்பாக அருள்பணியாளர்களை உருவாக்குவதில் கர்தினால் ஆற்றிய பணிகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

81 வயது நிரம்பிய கர்தினால் வெலாசியோ தெ பவ்லிஸ் அவர்கள், சில மாதங்களாக நோயினால் துன்புற்று, செப்டம்பர் 09, இச்சனிக்கிழமையன்று உரோம் நகரில் இறைபதம் அடைந்தார். இவரின் அடக்கச் சடங்கு திருப்பலி, செப்டம்பர் 11 இத்திங்கள் காலை 9 மணிக்கு நடைபெறுகின்றது. கர்தினால் அவர்களின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 220 ஆகவும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 120 ஆகவும் மாறியுள்ளன.   

புனித சார்லஸ் பொரோமியோ மறைப்பணி (ஸ்கலபிரினி) சபையைச் சார்ந்த கர்தினால் வெலாசியோ தெ பவ்லிஸ் அவர்கள், 1935ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இத்தாலியில் சொனினோ என்ற ஊரில் பிறந்தவர். இவர் இன்னும் 10 நாள்களுக்குள் அவரின் 82வது பிறந்த நாளைச் சிறப்பிக்க இருந்தார். இவர், உரோம் பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அறநெறியியல் மற்றும் திருஅவை சட்டப் பாடங்களைக் கற்பித்துள்ள பேராசிரியர் மற்றும் நிபுணர். அறிவியல், ஆன்மீகம், திருஅவை சட்டம் ஆகியவற்றில் 200க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

திருஅவையின் உச்ச நீதிமன்றத்தின் செயலராகவும் பணியாற்றிய கர்தினால் வெலாசியோ தெ பவ்லிஸ் அவர்கள், 2010ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.