2017-09-10 12:49:00

‘புனித யோசேப்பு இல்ல’த்தில் திருத்தந்தையின் உரை


செப்.10,2017. அன்பு குழந்தைகளே, இல்லப் பொறுப்பாளர்களே, இன்று, இங்கு, தன் வாழ்வு சாட்சியத்தை நம்மோடு பகிர்ந்துகொண்ட சிறுமி Claudia Yeseniaவுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். இச்சிறுமி அனுபவித்த துன்பங்களுக்கு செவிமடுத்தபோது, இவ்வுலகின் தீமைகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் அப்பாவிச் சிறார்களைக் குறித்து என் எண்ணங்கள் சென்றன.

குழந்தை இயேசுவும், பகைமை உணர்வுகள் மற்றும் சித்ரவதைகளின் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டார். மரணத்திலிருந்து தப்புவதற்காக அவர் இன்னொரு நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியிருந்தது. இன்றும், குழந்தைகள் துன்புறுவதைக் காணும்போது, இதயம் காயமடைகிறது, ஏனெனில், இயேசுவினால் அதிகம் அன்பு கூரப்பட்டவர்கள், குழந்தைகள்.  அவர்கள் தவறாக நடத்தப்படுவதையும், தங்கள் குழந்தைப் பருவத்தை அமைதியில் செலவிடுவதற்கான உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவர்களின் வருங்கால நம்பிக்கைகள் பொய்யாக்கப்படுவதையும், நாம் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. துன்புறுவோரை இயேசு ஒரு நாளும் கைவிடுவதில்லை, அதிலும் குறிப்பாக, குழந்தைகளை. நல்மனதுடையோரின் அன்புடன் கூடிய அக்கறை வழியாக இயேசு, குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.

சிறார்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்த இடம், புனித யோசேப்பின் பெயரால் அழைக்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். ஏரோது, குழந்தை இயேசுவைக் கொல்ல தேடியபோது, புனித யோசேப்புக்கு கனவில் தோன்றிய வானதூதர், இயேசுவையும் மரியாவையும் அழைத்துக்கொண்டு தப்பியோட பணித்தார். ஆம். புனித யோசசேப்பிடமே, குழந்தையையும் தாயையும் பாதுகாக்கும் பணி வழங்கப்பட்டது.

கைவிடப்பட்ட குழந்தைகள்மீது அக்கறைகாட்டி அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பிலுள்ளோரே, உங்களுக்கு இரு விடயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இயேசுவைக் கண்டுகொள்ள உதவும் அன்பு, இந்த சிறார் மத்தியில்தான் உள்ளது. மேலும், இக்குழந்தைகளை இயேசுவின் அருகே கொணரும் புனிதப் பணியை மறந்துவிடக்கூடாது.  புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவரின் எடுத்துக்காட்டு, உங்களுக்கு ஊக்கம் தரும். இச்சிறார்களே, கொலம்பியாவின், உலகின், திருஅவையின் வருங்காலம். உங்கள் பணிகளில், இயேசுவும், அன்னைமரியாவும், புனித யோசேப்புடன் சேர்ந்து, உங்களுக்கு மகிழ்வையும், சக்தியையும் வழங்குவார்களாக. உங்கள் அனைவருக்காகவும் செபிக்க நான் உறுதி வழங்குகிறேன். எனக்காகவும் செபிக்க மறவாதீர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.