2017-09-09 12:27:00

வில்லாவிசென்சியோ திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


செப்.09,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, மரியன்னையின் பிறந்தநாள், நம் அனைவர் மீதும் ஒளியென வீசுகிறது. கொலம்பியா நாட்டின் வாயிலெனக் கருதப்படும் வில்லாவிசென்சியோ (Villavicencio) மீதும், இங்குள்ள பழங்குடியினர் மீதும் ஒளி வீசுகிறது. உடைக்க இயலாத உடன்படிக்கையை இறைவன் மனிதர்களோடு ஏற்படுத்தியதைப் புரிந்துகொள்ள மரியன்னையின் பிறந்தநாள் நமக்கு உதவுகிறது.

இயேசுவின் மூதாதையர் பட்டியலை (மத். 1:1-17) இன்றைய நற்செய்தியில் கேட்டோம். இறைவன் தன்னை மனித குலத்தில் இணைத்துக்கொண்டதைக் கூறும் பட்டியல் இது. இருளும், ஒளியும், துன்பமும், இன்பமும் கலந்தது, இந்த வரலாற்றுப் பட்டியல். ஆண்களுக்கு மட்டுமே முக்கியத்துவமும், முதலிடமும் அளிக்கப்படும் நமது ஆணாதிக்க மனநிலையை மாற்ற, இயேசுவின் மூதாதையர் பட்டியலில் பெண்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று வரிசையில், நாம், இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோரையும் காண்கிறோம். மரியா 'ஆம்' என்று சொன்னதன் வழியே, இறைவன் மனித வரலாற்றை தன் கட்டுப்பாட்டிற்குள் கொணரமுடிந்தது. நீதிமானாகிய யோசேப்பு, தன் அகந்தையிலேயே தங்கியிருந்திருந்தால், இறைவன் இவ்வுலகிற்கு வருவதை தடுத்திருப்பார். சட்டங்களைப் பின்பற்றுவதைக் காட்டிலும், பிறரன்புக்கு முதலிடம் கொடுத்ததால், யோசேப்பு, மரியாவை ஏற்றுக்கொண்டார்; இயேசுவின் பிறப்புக்கு வழிவகுத்தார்.

கொலம்பிய மக்களுக்கும் மூதாதையர் பட்டியல் உள்ளது. இந்த வரலாற்றிலும், அன்பு, வெளிச்சம், துயரம், நாடுகடத்தல் என்ற பல அம்சங்கள் அடங்கியுள்ளன. இங்கும், எத்தனையோ ஆண்களும், பெண்களும் தங்கள் சொந்த நலன்களைத் துறந்து, நல்லதொரு வரலாற்றை உருவாக்கியுள்ளனர். உண்மைக்கு, நன்மைக்கு, ஒப்புரவுக்கு 'ஆம்' என்று சொல்லும்போது, இருளும், வன்முறையும் நிறைந்த நம் வாழ்வில் நற்செய்தியின் ஒளியை இறைவனால் கொணரமுடியும்.

ஒப்புரவு என்பது, கருத்தளவில் மட்டும் இருந்தால், அது பயன் தராது. வாழ்வின் துயரங்களையும், மோதல்களையும் அனுபவித்த அனைவரும், ஒருவர், ஒருவரை நோக்கி மனக்கதவுகளைத் திறக்கும்போது, ஒப்புரவு உருவாகிறது.

அன்பு, அமைதி, நீதி, ஒப்புரவு ஆகியவற்றை நோக்கிச் செல்லும் பாதையில், ஒரு சிலர், பிறருக்காகக் காத்திராமல், முதலடியை எடுத்துவைத்தால், நன்மைகள் உருவாகும். ஒருவர் மனதில் நம்பிக்கை தோன்றினால் போதுமானது. அந்த ஒருவர் நாமாக இருக்க முடியும்.

ஒப்புரவு என்பது, எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப, நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. உண்மையான அர்ப்பண உணர்வின்றி மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் தோற்றுப்போகும்.

இன்றைய நற்செய்தியின் இறுதியில், இயேசு, இம்மானுவேல், அதாவது, 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்ற கருத்தைக் கேட்டோம். மத்தேயு நற்செய்தியின் துவக்கமும் முடிவும், இறைவன் நம்முடன் இருப்பதைக் கூறுகின்றது. "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத். 28:20).

இந்த வாக்குறுதி, கொலம்பியா நாட்டிலும் உள்ளது. ஆயர் Jesús Emilio Jaramillo Monsalve அவர்களும், அருள்பணி Pedro María Ramírez Ramos அவர்களும் இந்த வாக்குறுதியின் அடையாளங்களாய் விளங்குகின்றனர். வெறுப்பு, கசப்பு என்ற சூழல்களிலிருந்து விடுபட்டு, இறைவனின் அன்பை பறைசாற்றியவர்கள் இவ்விருவரும்.

ஒப்புரவுக்கென நாம் சொல்லும் 'ஆம்' என்ற சம்மதம், இயற்கையையும் உள்ளடக்க வேண்டும். நம் இதயங்களில் உள்ள வன்முறைகள், இயற்கை மீதும் வெளிப்படுவதை நாம் உணர்கிறோம். இறைவனின் அரும்பெரும் செயல்களுக்கு 'ஆம்' என்று சொன்ன அன்னை மரியாவுடன் நாமும் இணைந்து 'ஆம்' என்று சொல்வோம். வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ, கொலம்பிய மக்கள், ஒப்புரவை உறுதிப்படுத்தும், 'ஆம்' என்ற சம்மதத்தை வழங்குவதற்கு, இறைவன் துணை செய்வாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.