2017-09-09 14:24:00

வில்லாவிசென்சியோ ஒப்புரவு சந்திப்பில் திருத்தந்தையின் உரை


செப்.09,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, நான் இங்கு உங்களுக்கு உரை வழங்க வரவில்லை. மாறாக, உங்களை நேருக்குநேர் கண்கொண்டு நோக்கவும், உங்களுக்கு செவிமடுக்கவும், வாழ்வு மற்றும் விசுவாசம் குறித்த உங்களின் சாட்சியத்திற்கு என் இதயத்தைத் திறக்கவும் வந்துள்ளேன். நீங்கள் எனக்கு அனுமதி தந்தால், உங்கள் அனைவரையும் அரவணைக்கவும், கடவுள் எனக்கு அருளை வழங்கினால், உங்களோடு சேர்ந்து அழவும் நான் தயாராக உள்ளேன். விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் ஒருவரையொருவர் மன்னிக்க உதவும் நோக்கத்தில் இணைந்து செபிப்போம். 

2002ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி கோவிலுக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசுவாசிகள் படுகொலைச் செய்யப்பட்டதற்கு சாட்சியாக இருக்கும் Bojayá சிலுவையின் அடியில் இன்று கூடியுள்ளோம். இன்று நாம் அந்நிகழ்வை மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாக இந்நாட்டில் இடம்பெறும் வன்முறைகளையும், இரத்தம் சிந்தல்களையும், துயர்களையும் மரணங்களையும் எண்ணிப் பார்க்கிறோம்.

தன் மக்களுக்காக, அந்த மக்களோடு துன்புறுவதற்காக இவ்வுலகம் வந்த இறைவன், பகைமை, என்றுமே வெற்றி பெறாது, அன்பு, மரணத்தையும் வன்முறையையும் விட வலிமையானது என்பதை நமக்குக் காட்டுகிறார். துன்பத்தை வாழ்வின் ஊற்றாக மாற்றமுடியும் என்பதை காண்பிக்கிறார் இயேசு. அதன் வழியாக, நாமும் அவரோடு இணைந்து, மன்னிப்பின் வலிமையை கற்றுக்கொள்ள முடியும்.

இன்று, தங்கள் வாழ்வு அனுபவங்களை, இங்கு பகிர்ந்துகொண்ட நான்கு பேருக்கு, நான் நன்றி கூறுகிறேன். அவர்களின் சொற்கள், என் நெஞ்சைத் தொட்டன. துன்பமும், துயரமும் நிறைந்த இந்த பகிர்வுகள், மன்னிப்பையும் அன்பையும் உள்ளடக்கியதாக இருந்து, வாழ்வையும் நம்பிக்கையையும் குறித்துப் பேசுகின்றன. குற்றமிழைத்தவர்கள் மன்னிப்பை வேண்டுவதையும், குற்றமிழைக்கப்பட்டவர்கள் மன்னிக்க முன்வருவதையும் குறித்த விவரங்களை இங்கு பகிரக் கேட்டோம். இதுவே, அமைதியையும் இணக்கவாழ்வையும் நோக்கிய பாதையில் நாம் எடுத்துவைக்கும் முக்கிய முதலடி.

Pastora Mira அவர்களின் சாட்சியம், வன்முறை எனும் சக்கரச் சுழற்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில், அனைத்து துயர்களையும் இறைவனின் காலடியில் வைத்து, அவற்றை ஆசீராகவும் மன்னிப்பாகவும் மாற்றும் நோக்கம் கொண்டதாக இருந்தது.

வன்முறை, வன்முறையையும், பகைமை, பகைமையையும், மரணம், மேலும் மரணத்தையுமே கொணரும். இந்தச் சுழற்சியை, மன்னிப்பு, மற்றும், நிலையான ஒப்புரவு வழியாகவே மாற்றியமைக்க முடியும். அதேவேளை, Luz Dary அவர்கள்  இன்று வழங்கிய சாட்சிய வார்த்தைகளையும் நாம் நினைவுகூர வேண்டும். உடம்பின் காயங்களைவிட மனதின் காயங்கள் ஆழமானவை என்றார் அவர். ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்களை அகற்ற, அவர் எடுத்துவரும் முயற்சிகள், அமைதியையும், வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் தருகின்றன.

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட Deisy மற்றும் Juan Carlos ஆகியோரின் சாட்சியங்களும் வலிமை நிறைந்தவை. பாதிக்கப்பட்டோருக்கு உதவவும், இன்றையை இளையோர் வன்முறையின் பக்கமும், போதைப்பொருட்கள் பக்கமும் திரும்பாமல் இருக்க உதவவும், இவர்கள் இருவரும் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நமக்குத் துன்பமிழைத்தவர்கள் மீது நம்பிக்கை வைத்து முன்னோக்கி செல்வது, ஒரு பெரும் சவால்தான். ஆனால், எல்லாரும் தீயவர்கள் அல்ல. கொலம்பியா எனும் பெரும் தோட்டத்தில் களைகளுக்கும் இடம் உள்ளது. களைகளால் ஏமாற்றமடையாமல் இருப்போம். கனிகளில் கவனம் செலுத்துவோம். களைகளால் நம் நிம்மதியை இழக்க வேண்டாம். மோதல்களும், வன்முறைகளும், பழிவாங்கும் எண்ணங்களும் தலைதூக்கும்போது, அவை, நீதியையும் இரக்கத்தையும் வெற்றிகொள்ள அனுமதியாதீர்கள்.

தங்கள் தவறுகளை உணர்ந்து, அதற்கு மன்னிப்பை வேண்டும் மனிதர்களை வரவேற்போம். அதன் வழியாக, நீதியும் அமைதியும் ஒளிர்விடும் புதிய ஒழுங்குமுறையை கட்டியெழுப்புவோம். Juan Carlos அவர்கள், தன் சாட்சியத்தில் கூறியதைப்போல், உண்மை என்பது, நீதி மற்றும் இரக்கத்திலிருந்து பிரிக்க முடியாதது. அமைதியைக் கட்டியெழுப்ப, இவை மூன்றும் இன்றியமையாதவை. இங்கு உண்மை என்பது, காணாமல்போன உறவினர்கள் குறித்த விவரங்களையும், வன்முறையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர் குறித்த விவரங்களையும் வெளியிடுவதையும், வன்முறை மற்றும் உரிமை மீறல்களால் பெண்கள் அனுபவித்த துன்பங்களுக்கு பொறுப்பேற்று ஏற்றுக்கொள்வதையும் குறித்து நிற்கின்றது.

நான் இறுதியாக, ஒரு சகோதரனாகவும், தந்தையாகவும் உங்களிடம் ஒன்று கூற விழைகிறேன், 'இறைமக்களாக, ஒப்புரவை நோக்கி உங்கள் இதயங்களைத் திறங்கள். உண்மையையும் நீதியையும் கண்டு அஞ்சாதீர்கள். மன்னிப்பு கேட்கவும், மன்னிப்பை வழங்கவும் பயப்படாதீர்கள். பகைமையை வெற்றிகண்டு, நம் ஒவ்வொருவரையும் சகோதர சகோதரிகளாக ஒன்றிணைக்கும் ஒப்புரவை ஏற்க மறுக்காதீர்கள். காயங்களைக் குணப்படுத்தவும், பாலங்களைக் கட்டியெழுப்பவும், வேறுபாடுகளை வெற்றி கொள்ளவும் இதுவே நேரம். பகைமையை உதறித் தள்ளவும், பழிவாங்கும் உணர்வை மறுதலிக்கவும், நீதி, உண்மை மற்றும் உடன்பிறந்த உணர்வில் நிறுவப்படும் ஒன்றிணைந்த வாழ்வுக்கு  நம்மைத் திறக்கவும் இதுவே உகந்த நேரம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.