2017-09-09 15:35:00

வில்லாவிசென்சியோவில் திருத்தந்தை திருப்பலி


செப்.09,2017. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வில்லாவிசென்சியோ (Villavicencio) நகரம், 1840ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி உருவாக்கப்பட்டது. "Villavo" என்றால் அழகு என அர்த்தம். கொலம்பியாவின் வர்த்தக நகரமான வில்லாவிசென்சியோ, ஆன்டெஸ் மலைப் பகுதி, அமேசான் பருவமழைக்காடுகள் இவையிரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில், அமைந்து, அதன் வெப்பநிலையும் எப்போதும் 28 முதல் 30 செல்சியுஸ் டிகிரிக்குள்ளே உள்ளது. ஆன்டெஸ் மலையடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளதால், அம்மலையிலிருந்து வீசும் தென்றல் காற்று காலையிலும் மாலையிலும் மக்களின் மனங்களை மகிழ்விக்கின்றது. இந்த மகிழ்வு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணத்தால், மக்களில் இன்னும் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்நாள்களில் கொலம்பியாவில் திருத்தந்தையோடு பயணம் மேற்கொள்ளும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் பர்க் அவர்கள், வத்திக்கான் வானொலியில் பேசியபோது, திருத்தந்தையும் இந்நாட்டில் இருப்பதில் மிகவும் மகிழ்ந்திருக்கிறார் என்று உணர முடிகின்றது என்று கூறினார். கொலம்பியாவில், இந்நாள்களில் ஏராளமான இளையோரைப் பார்ப்பது, அந்நாட்டு மக்கள் முகங்களில் மகிழ்ச்சியைக் காண்பது போன்றவை திருத்தந்தைக்கு மிகவும் மகிழ்வைத் தந்து, அம்மக்களின் மகிழ்வை தன் உரைகள், செயல்கள் வழியாக திருத்தந்தை மேலும் அதிகரிக்கிறார் என, பர்க் அவர்கள் தெரிவித்தார். கொலம்பியாவில், தனது இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை, தலைநகர் பொகோட்டா, வில்லாவிசென்சியோ ஆகிய இரு நகரங்களில் இப்பயண நிகழ்வுகளை நிறைவு செய்துள்ளார். இச்சனிக்கிழமையன்று, மெடலின் நகரில் பயண நிகழ்வுகளை நிகழ்த்துகிறார்.

செப்டம்பர் 08, இவ்வெள்ளிக்கிழமை காலையில் பொகோட்டா CATAM இராணுவ விமானநிலையத்தில், முன்னாள் இராணுவ வீரர்கள், காவல்துறையினர் என நானூறுக்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்து, அவர்கள் நாட்டின் அமைதிக்கு ஆற்றியுள்ள பணிக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அவர்களோடு சேர்ந்து அன்னை மரியிடம் செபித்தார். பின் தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. பின், அங்கிருந்து ஏறத்தாழ 75 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வில்லாவிசென்சியோ நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. வில்லாவிசென்சியோ நகரில், முதல் நிகழ்வாக, இறையடியார்கள் மறைசாட்சிகள் மரிய ரமிரெஸ் ராமோஸ் (Maria Ramírez Ramos), ஹேசுஸ் ஹாரமில்லோ மொன்சால்வே (Jesús Jaramillo Monsalve) ஆகிய இருவரையும், முத்திப்பேறு பெற்றவர்கள் என அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித கன்னி மரியாவின் பிறப்பு விழாவான செப்டம்பர் 8, இவ்வெள்ளியன்று இத்திருப்பலியை அன்னை மரியாவுக்கே அர்ப்பணித்தார்.

அமேசான் துறைமுகப் பகுதியில் திருத்தந்தை நிறைவேற்றிய இத்திருப்பலியில் பங்குகொண்ட நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் முன்னிலையில், இறையடியார்கள் மரிய ரமிரெஸ் ராமோஸ், ஹேசுஸ் ஹாரமில்லோ மொன்சால்வே ஆகிய இருவரையும் முத்திப்பேறு பெற்றவர்கள் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

“நான் உலகம் முடியும்வரை உங்களோடு இருப்பேன்” என இயேசு கூறிய நற்செய்தி திருச்சொற்களை மையப்படுத்தி, இத்திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை.

இத்திருப்பலியின் இறுதியில், வில்லாவிசென்சியோ பேராயர் Oscar Urbina Ortega அவர்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்ஸிகோ நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தனது செபத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார். மேலும், இர்மா கடும் சூறாவளி புயற்காற்றால் கரீபியன் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆட்சேதம், பொருள்சேதம் போன்றவற்றையும் குறிப்பிட்டு, இதில் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை. அனைத்து விசுவாசிகளையும் அதற்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.