2017-09-09 16:03:00

வில்லாவிசென்சியோவில் ஒப்புரவு நிகழ்வுகள்


செப்.09,2017. கொலம்பிய நாட்டின் வில்லாவிசென்சியோ நகரில், இவ்வெள்ளி மாலை 3.30 மணிக்கு, Las Malocas பூங்காவில் தேசிய ஒப்புரவுக்கான செபக் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். 2002ம் ஆண்டு மே 2ம் தேதி Bojayá ஆலயம் தாக்கப்பட்டதில், உருவிழந்த, எரிந்த  சிதைந்துபோன, கால்கள் இல்லாத கறுப்புநிற இயேசுவின் திருச்சிலுவை, இச்செபக்கூட்டம் நடைபெற்ற மேடையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டுகளில் நடந்த வன்முறை மற்றும் தீமைகளை நினைவுபடுத்துவதாக இச்சிலுவை உள்ளது. அந்த ஆலயம் தாக்கப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொலம்பிய உள்நாட்டுப்போரின் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், முன்னாள் புரட்சிக்குழுவினர் ஆகியோரின் பிரதிநிதிகள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். வில்லாவிச்சென்சியோ பேராயர் Oscar Urbina Ortega அவர்கள் முதலில் வரவேற்றுப் பேசினார். பின் அமைதி பற்றிய பாடல் பாடப்பட்டது. கொலம்பியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சண்டையில் பலவிதமாகப் பாதிக்கப்பட்ட நான்கு பேர் சாட்சியம் சொன்னார்கள். ஒவ்வொருவரும் சாட்சியம் சொல்லியபின், அத்திருச்சிலுவையின் முன் மெழுகுதிரிகளை ஏற்றிவைத்தனர்.

திருத்தந்தையின்முன் சாட்சியம் சொன்னவர்களில் ஒருவரான Pastora Mira என்பவர், போரில் தனது மகளையும் மகனையும் இழந்தவர். தற்போது, தனது மகனைக் கொலைசெய்தவர்களில் ஒருவரைப் பராமரித்து வருகிறார். அடுத்து சாட்சியம் சொன்ன  Luz Dary என்பவர், நிலக்கண்ணி வெடியால் கடுமையாய்க் காயப்பட்டு துன்புற்றவர். எனினும் தற்போது குணமடைந்து, மக்களில் அச்சத்தையும், மனக்காயத்தையும் போக்குவதற்கு உழைத்து வருகிறார். மற்ற இருவரும் முன்னாள் வன்முறை புரட்சிக்குழுக்களைச் சார்ந்தவர்கள். வன்முறையின் கொடுமைகளை ஏற்ற இவர்கள், அவை தங்கள் வாழ்வை எவ்வாறு மாற்றியுள்ளன எனப் பகிர்ந்து கொண்டனர். தேசிய ஒப்புரவு செப நிகழ்வில் திருத்தந்தை ஆற்றிய உரையில், பலரின் சார்பாக, சாட்சியம் சொன்ன இவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இவர்கள் அனுபவித்த துன்பங்களையும் வேதனைகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்களிடம் தற்போது காணப்படும் அன்பு மற்றும் மன்னிப்பைக் கேட்டபோது, நான் மிகவும் மனம் உருகினேன். வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும், வேதனையும் நம் வாழ்வை மிஞ்சவிடாமல் மன்னிப்பை இவர்கள் விதைத்திருக்கின்றார்கள் என்ற திருத்தந்தை, அமைதிக்கும் ஒப்புரவுக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்தப் பூங்காவில் ஒப்புரவு செப நிகழ்வை நிறைவுசெய்து, அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள los Fundadores பூங்கா சென்றார் திருத்தந்தை. இங்கு தேசிய ஒப்புரவின் நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்டுள்ள திருச்சிலுவையின்முன் சிறிதுநேரம் அமைதியாக செபித்தார் திருத்தந்தை. இந்நிகழ்வில் கொலம்பிய அரசுத்தலைவர் ஹூவான் மானுவேல் சாந்தோஸ் கால்தெரோன், சிறார், பழங்குடியின மக்கள் குழு என ஏறத்தாழ நானூறு ஆகியோர் கலந்துகொண்டனர். சிறார் திருத்தந்தையுடன் அச்சிலுவையின் முன் சென்றபோது, பாடகர் குழு, மரபுப் பாடல் ஒன்றை பாடியது. இந்த நினைவுச்சின்னத்தில், அந்த நாட்டில் அண்மை ஆண்டுகளில் வன்முறைக்குப் பலியானவர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாகவும் இது உள்ளது. இராணுவம் அமைதிக்குரிய மணியை ஒலித்த பின், சிறிதுநேரம் அமைதியில் அனைவரும் செபித்தனர். பின், புதுப்பிக்கப்பட்ட வாழ்வின் அடையாளமாக திருத்தந்தை ஒரு மரத்தை நட்டார். வெண்ணிற ஆடையணிந்த இரு சிறாரும் அங்கு நின்று திருத்தந்தைக்கு உதவினர். ஒப்புரவு நிகழ்வுகள் என்பதால், இவற்றில் பங்குகொண்டவர்களில் ஏறத்தாழ அனைவருமே வெண்ணிறத்தில் ஆடை அணிந்திருந்தனர்.   

இந்நிகழ்வை நிறைவுசெய்து பொகோட்டாவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.  அந்நகர் திருப்பீடத் தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். ஒவ்வொரு நாள் இரவும், இத்தூதரகத்தின்முன் ஒரு குழுவினர் கூடுகின்றனர். “முதல் அடியை எடுத்து வைப்போம்”என்ற இப்பயணத்தின் கருப்பொருளை மையப்படுத்தி இக்குழு கூடுகிறது. இவர்களுக்கு நல்வார்த்தைகள் சொல்லி அன்றைய நாளை நிறைவு செய்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். கொலம்பியாவில், ஏன் உலகெங்கும் மக்கள் மனங்களில் அமைதியும் ஒப்புரவும் மன்னிப்பும் நிலவுதாக. திருத்தந்தை, கொலம்பியத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, செப்டம்பர் 11, வருகிற திங்களன்று வத்திக்கான் வந்தடைவார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.