2017-09-09 15:47:00

முத்திப்பேறு பெற்ற ஹாரமில்லோ, ரமிரெஸ்


செப்.09,2017. முத்திப்பேறு பெற்ற ஹேசுஸ் ஹாரமில்லோ மொன்சால்வே அவர்கள், 1916ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாளன்று, கொலம்பியாவின் சாந்தோ தொமிங்கோவில் பிறந்தார். 1940ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1970ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி Araucaவுக்கு அப்போஸ்தலிக்க உதவியாளராக நியமிக்கப்பட்டார். திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 1984ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி, Araucaஐ மறைமாவட்டமாக உயர்த்தி, அதன் முதல் ஆயராக, முத்திப்பேறு பெற்ற ஹாரமில்லோ அவர்களை நியமித்தார். கொலம்பியாவில் போதைப்பொருள் தொடர்பான மோதல்கள் மற்றும், அரசியல் மோதல்களில் 1989ம் ஆண்டு கொல்லப்பட்டார், ஆயர் ஹாரமில்லோ. இவர் கொல்லப்பட்டதை அறிவித்து அறிக்கை வெளியிட்ட கொலம்பிய ஆயர் பேரவை, சவேரியன் அருள்பணியாளர்கள் சபையைச் சார்ந்த ஆயர் ஹாரமில்லோ அவர்கள், 18 ஆண்டுகள், உண்மையான மறைப்பணி ஆர்வத்துடன் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர். கிறிஸ்துவின் மீதுள்ள அன்பால் இவரது வார்த்தைகள் ஒளியேற்றப்பட்டன. நற்செய்திக்கும், அமைதிக்கும், ஒப்புரவுக்கும், நல்லிணக்க வாழ்வுக்கும், மனிதரின் புனித உரிமைகளைப் பாதுகாக்கவும் எப்போதும் குரல் கொடுத்தவர் எனக் கூறியது.

மறைமாவட்ட அருள்பணியாளரான முத்திப்பேறு பெற்ற மரிய ரமிரெஸ் ராமோஸ் அவர்கள், 1899ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி La Plataவில் பிறந்தார். பங்குத்தளத்தில் முக்கிய பணிகளை ஆற்றிய இவர், பங்குத்தளப்பணிகளை விட்டுவிடாமல், ஆசிரியப் பணியைத் தொடர்ந்து ஆற்றினார். 1931 ஆண்டு ஜூன் மாதத்தில் அருள்பணியாளரானார். நான்கு பங்குகளில் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய இவர், Armero என்ற பங்குத்தளத்தில் பணியாற்றியபோது, 1946ம் ஆண்டு மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.