2017-09-08 16:03:00

திருத்தந்தை பிரான்சிஸ் - கொலம்பிய மக்களுக்கு வாழ்த்துரை


செப்.08,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். (லூக்கா 10: 5-6)

கொலம்பியா என்ற இல்லத்தில் இன்று நான் நுழையும்போது, 'உங்களுக்கு அமைதி' என்று கூற விழைகிறேன். நான் உங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன். எதிர்ப்புகளிடையே நீங்கள் காட்டிவரும் நம்பிக்கையைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன். மக்களிடமிருந்து அருள்பணியாளர்களும், ஆயர்களும் கற்றுக்கொள்வது அவசியம். நான் ஓர் ஆயராக உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்.

இறைவன் யாரையும் ஒதுக்கிவைப்பதில்லை; அனைவரையும் அவர் அரவணைக்கிறார் என்ற உண்மையை இந்நாள்களில், இந்நாட்டிற்குச் சொல்லவந்துள்ளேன்.

இங்கு கூடியிருக்கும் இளையோருக்கு நான் சொல்ல விழைவது இதுதான்: உங்கள் மகிழ்வை உயிர்துடிப்புடையதாக வாழவிடுங்கள். வேறு யாரும் இந்த மகிழ்வை உங்களிடமிருந்து பறித்துவிட அனுமதிக்கவேண்டாம். இறைவனே இந்த மகிழ்வின் ஆதாரம். எதிர்காலத்தைக் குறித்து அஞ்சவேண்டாம்! உன்னதக் கனவுகளைக் காணுங்கள்!

அடுத்தவர் அடையும் துன்பங்களை முதலில் அடையாளம் காண்பது, இளையோரே! துன்பங்கள் சூழும்வேளையில், உங்கள் நேரம், வசதி ஆகியவற்றைத் தியாகம் செய்துவிட்டு, அடுத்தவருக்கு உதவ முன்வருவது, முதலில் இளையோரே! துன்பம், புறக்கணிப்பு ஆகியவற்றை உணரும் வயது முதிர்ந்த எங்களுக்கு உதவ வாருங்கள்!

ஒருவரையொருவர் சந்திப்பது, இளையோராகிய உங்களுக்கு எளிதாக உள்ளது. எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றைத் தாண்டி, சந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். இந்த சந்திக்கும் கலாச்சாரத்தை, வயதான எங்களுக்குச் சொல்லித்தாருங்கள்!

இளையோராகிய உங்களுக்கு, மன்னிப்பதும் எளிதாக உள்ளது. கொலம்பிய வரலாற்றில் காயப்பட்ட முதியோர், பழையக் காயங்களைவிட்டு வெளியேறி, மன்னிக்கும் மனதை வளர்த்துக்கொள்ள, எங்களுக்குச் சொல்லித்தாருங்கள்! மன்னிப்பின் வழியே, எங்கள் உள்ளங்களைக் குணமாக்க உதவி செய்யுங்கள்!

இளையோரே, கனவு காணுங்கள், எழுந்து நில்லுங்கள், சவால்களை எதிர்கொள்ளுங்கள், வாழ்வைப் புன்முறுவலுடன் சந்தியுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள்! செய்தித் தாள்களின் தலைப்புக்களில் சொல்லப்படும் நாட்டைக்காட்டிலும், உண்மையான நாட்டை நீங்களாகவே கண்டுபிடியுங்கள்.

இங்கு கூடியிருக்கும் குழந்தைகள், இளையோர், வயதுவந்தோர், வயதுமுதிர்ந்தோர் அனைவருக்கும் நான் கூற விழைவது இதுதான்... நீங்கள் சந்திக்கும் துயரங்கள், உங்களை அழுத்தி வதைக்க விடவேண்டாம், வன்முறை உங்களை உடைக்க விடவேண்டாம், தீமை உங்களை வெற்றிகொள்ள விடவேண்டாம்.

இங்கு கூடியிருக்கும் அனைவரையும் அரவணைக்கிறேன். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.