2017-09-08 15:35:00

வில்லாவிசென்சியோவில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.08,2017. செப்டம்பர் 08, இவ்வெள்ளிக்கிழமை, இயேசுவின் தாய் கன்னிமரியின் பிறந்த நாள். வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை விழா. இந்நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தனது இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, கொலம்பிய நாட்டிற்கு, செப்டம்பர் 06, இப்புதன்கிழமை மாலையில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, தலைநகர் பொகோட்டாவில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, இவ்வெள்ளி கொலம்பிய நேரம் காலை 7.20 மணிக்கு, தான் தங்கியிருந்த பொகோட்டா திருப்பீடத் தூதரகத்திலிருந்து அந்நகர் விமானநிலையத்திற்குக் காரில் புறப்பட்டார். விமானநிலையத்தில், காவல்துறையினர், இராணுவத்தினர், அரசு அதிகாரிகள் என ஏறத்தாழ நானூறு பேர் திருத்தந்தையை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். அங்கிருந்து, நாற்பது நிமிடங்கள் விமானப்பயணம் செய்து, வில்லாவிசென்சியோ நகர் விமான நிலையத்தை அடைந்தார். கொலம்பியாவின் வர்த்தக மற்றும் தொழிற்சாலை நகரமான வில்லாவிசென்சியோவில், இறையடியார்கள் Arauca ஆயர், ஹேசுஸ் எமிலியோ ஹாரமில்லோ மொன்சால்வே, மறைமாவட்ட அருள்பணியாளர் பேத்ரோ மரியா ரமிரெஸ் ராமோஸ் ஆகிய இருவரையும் அருளாளர்களாக அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றுதல், தேசிய ஒப்புரவுக்கான மாபெரும் சந்திப்பு, அந்நகரின் ஒப்புரவு திருச்சிலுவையின்முன் செபித்தல், மீண்டும் பொகோட்டா செல்தல் ஆகியவை திருத்தந்தையின் பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வெள்ளி நிகழ்வுகளை நிறைவுசெய்து திருத்தந்தை உறங்கச் செல்லும்போது, இந்திய, இலங்கை நேரம் செப்டம்பர் 09, இச்சனிக்கிழமை அதிகாலை 5 மணி, 45 நிமிடங்களாக இருக்கும். ஏறத்தாழ 53 ஆண்டுகள் உள்நாட்டுச் சண்டைக்குப்பின், ஒப்புரவு மற்றும் அமைதியின் பாதையில் செல்ல முயற்சிக்கும் கொலம்பிய மக்களுக்காக ஆரோக்ய அன்னையிடம் மன்றாடுவோம். வில்லாவிசென்சியோவில் மழையிலும் விசுவாசிகள் அமைதியாக திருத்தந்தையின் திருப்பலிக்காகக் காத்திருக்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.