2017-09-08 15:38:00

பொகோட்டா திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


செப்.08,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, கெனசரேத்து ஏரிக்கரையில் முதல் சீடர்கள் பெற்ற அழைப்பைக் குறித்து நற்செய்தியில் கேட்டோம். அந்த ஏரிதான் மீனவர்களின் வாழ்வாதாரமாய் இருந்தது. அன்று, அந்த ஏரியில் ஒன்றும் கிடைக்காததால், மீனவர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். கிறிஸ்தவ பாரம்பரியத்தில், கடல், மக்கள் சமுதாயத்தையும், அதில் காணப்படும் குழப்பங்களையும், இருளையும் சுட்டிக்காட்டுகின்றது.

நாம் இன்றும் இத்தகைய சொற்களைப் பயன்படுத்துகிறோம். அதிகமாக மக்கள் கூடியிருப்பதை, 'கடலென திரண்டுள்ள மக்கள்' என்று  கூறுகிறோம். அன்று இயேசு, இருளும், குழப்பமும் நிறைந்த கலிலேயக் கடலை தனக்குப் பின்புறமும், மக்கள் கடலை தனக்கு முன்புறமும் கொண்டிருந்தார். சக்திமிக்க அவரது வார்த்தைகளைக் கேட்க, மக்கள் ஆவலோடு கூடியிருந்தனர்.

கொலம்பியா நாடும், பொகோட்டா நகரமும் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள காட்சிகளை மீண்டும் கண்முன் கொணர்கின்றன. இங்கும் மக்கள் இறைவார்த்தையைக் கேட்க ஆவலோடு கூடியுள்ளனர்.

இந்த நாட்டிலுள்ள செல்வங்கள் அனைவருக்கும் போதுமான அளவு உள்ளன. ஆயினும், உலகத்தின் பல நாடுகளில் நடப்பதுபோலவே, இங்கும், வாழ்வை அழிக்கும் இருள் மண்டிக்கிடக்கிறது. தனிப்பட்டோரின் சுயநலத்தால் மண்டிக்கிடக்கும் இருள், மாசற்றோரின் உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

இயேசு, அந்த இருளைப்போக்க, கடல் நடுவே படகைச் செலுத்தச் சொல்கிறார். "ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போங்கள்" (லூக்கா 5:4) என்று பேதுருவிடம் கட்டளையிடுகிறார்.

'பாடுபட்டு உழைத்தும், பலன் ஒன்றுமில்லை' என்று சொல்லும் பேதுருவைப்போல் நாமும் உணர்ந்திருக்கிறோம். இந்த நாடு, பயனற்ற பல விவாதங்களில் காலத்தை வீணாக்கியுள்ளது. இங்குள்ள பிரிவுகளின் விளைவாக, அரசும், திருஅவையும் தோல்விகளைச் சந்தித்துள்ளன.

இருப்பினும், ஆண்டவரின் வார்த்தைகளை நம்பி செயல்பட்ட பேதுருவைப்போல் நாமும் செயல்பட முடியும். அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்த பேதுருவைப்போல், சீடர்களைப்போல் நாமும் மாறமுடியும்.

"ஆழத்திற்கு தள்ளிக்கொண்டுபோய் வலைகளைப் போடுங்கள்" என்ற கட்டளை பேதுருவுக்கு மட்டுமல்ல, கொலம்பியா நாட்டை உருவாக்கிய முன்னோருக்கும் தரப்பட்ட கட்டளை. இன்றும் நமக்குத் தரப்படும் கட்டளை.

வியக்கத்தக்க மீன்பிடிப்பைக் கண்ட சீடர்கள், மற்ற படகுகளில் இருந்தோருக்கு சைகைகாட்டி துணைக்கு வருமாறு அழைத்ததைப்போல, நாமும், பொதுவான நலனைப் பேணிக்காக்க, மற்றவர்களை துணைக்கு அழைப்போம்.

இந்தப் புதுமையைக் கண்ட பேதுரு, தன் சிறுமையை, தன் பலமற்ற நிலையை உணர்கிறார். இந்த நாட்டின் வரலாற்றில் காணப்படும் பிரிவுகள், வன்முறைகள் அனைத்தையும் நாம் அறிவோம். ஆனால், பேதுருவைப்போல் ஆண்டவரை நம்பி, ஆழத்திற்குச் செல்வோம். நமது அச்சங்களைத் தவிர்த்து, அவரது அமைதியைப் பரப்பும் கருவிகளாக மாறுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.