2017-09-08 15:44:00

பொகோட்டா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.08,2017. செப்டம்பர் 07, இவ்வியாழனன்று கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில், உள்ளூர் நேரம் காலை 8.40 மணிக்கு தனது முதல் நாள் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். பொகோட்டா திருப்பீடத் துதரகத்திலிருந்து 7.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள Casa de Narino என்றழைக்கப்படும் அரசுத்தலைவர் மாளிகைக்கு திருத்தந்தை காரில் செல்ல, அந்தக் காருக்கு முன்னும் பின்னும், கொலம்பியக் கொடி நிறங்களின் பட்டுத்துணிகளால் போர்த்தப்பட்ட குதிரைகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்காகச் சென்றனர். சாலையின் இருபக்கங்களிலும் காவல்துறையினர் அணிவகுத்து நின்றனர். மக்கள் வெள்ளமும் அலைமோதியது. மக்களின் ஆரவாரத்தைப் பார்த்தபோது, கொலம்பியா, ஒரு கத்தோலிக்க நாடு என்பது தெளிவாகத் தெரிந்தது. அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவர் ஹூவான் மானுவேல் சாந்தோஸ் கால்தெரோன் (Juan Manuel Santos Calderon), அவரது துணைவியார் மரிய கிளமென்சியா ஆகியோர் திருத்தந்தையை வரவேற்றனர். பின் சிவப்பு கம்பள அதிகாரப்பூர்வ வரவேற்புகள் நடைபெற்றன. வெள்ளை உடையணிந்த நூற்றுக்கணக்கான சிறார் மேடையில் திருத்தந்தைக்கு இருபுறமும் நின்று கொண்டிருந்தனர். அதோடு அவர்கள் திருத்தந்தைக்கு வாழ்த்துப் பாடல் ஒன்றையும் பாடினர். பின் பிரமாண்டமான இந்த மாளிகையில், அரசு, திருஅவை, தூதரக, அரசியல், பொதுமக்கள் மற்றும், கலாச்சாரத் துறைகளின் பிரதிநிதிகள் என, 700க்கும் அதிகமான பேரைச் சந்தித்தார் திருத்தந்தை. இச்சந்திப்பில் அரசுத்தலைவர் கால்தெரோன் அவர்கள் முதலில் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கொலம்பியாவில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. ஆயினும், புதுப்பித்தல் பணிக்கு முதல் அடி எடுத்து வைக்க வேண்டியது மிக முக்கியமாக உள்ளது. அதாவது ஒப்புரவை நோக்கிய படியை எடுத்து வைக்க வேண்டியுள்ளது. நம் இதயங்களில் ஆயுதங்களைப் புதைத்துக்கொண்டு, துப்பாக்கிகளை மௌனப்படுத்துவது மதிப்பற்றது. நாம் இன்னும் ஒருவரையொருவர் பகைவர்களாகப் பார்த்துக்கொண்டு இருந்தால், போரை நிறுத்தியதில் அர்த்தமில்லை என்றார் அரசுத்தலைவர் கால்தெரோன். ``முதல் அடியை எடுத்துவைப்போம்'' என்ற இத்திருத்தூதுப்பயணத்தின் குறிக்கோளை மையப்படுத்தி பேசிய அவர், பல பத்து ஆண்டுகளாக நடந்த ஆயுதமோதல்களால் ஏற்பட்ட அச்சத்தை அகற்ற வேண்டும். மோதல்களும் போர்களும் இடம்பெற்ற கொலம்பிய நாடு, அமைதியின் அடையாளமாக உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று உரையாற்றினார். பின் திருத்தந்தை, கொலம்பிய நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார்.

இச்சந்திப்புக்குப் பின் அரசுத்தலைவரை, மரியாதைநிமித்தம் சந்தித்து, பரிசுப்பொருள்களையும் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. அம்மாளிகையின் தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார் திருத்தந்தை. இச்சந்திப்பை நிறைவுசெய்து, அரசுத்தலைவர், அவரது துணைவியார் ஆகியோருடன் திருத்தந்தை சிவுப்புக் கம்பளத்தில் நடந்தவந்தபோது, திடீரென ஒருவர் ஓடிவந்து திருத்தந்தையின்முன் முழந்தாள்படியிட்டார். பின் ஒரு சிறுமி மலர்க்கொத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். மனநலம் குன்றிய ஒருவர், சக்கரவண்டியில் இருந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுமி ஆகியோரும் திருத்தந்தையின் ஆசீர் பெற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.