2017-09-08 15:55:00

கொலம்பிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை


செப்.08,2017. அன்பு சகோதரர்களே, 'அமைதி உங்களுக்கு உரித்தாகுக' என்பது, சாவை வெற்றிகண்ட இயேசு வழங்கிய வாழ்த்து. அதனை, நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

நான் இந்நாட்டிற்கு கிறிஸ்துவை பறைசாற்ற வந்துள்ளேன். அவரது பெயரால் அமைதியையும், ஒப்புரவையும் இந்நாட்டில் பரப்ப வந்துள்ளேன்.

இந்நாட்டு மக்களின் அடக்கமுடியாத ஆனந்தம், இளையோரிடையே காணப்படும் புன்சிரிப்பு, நற்செய்திக்கென காட்டப்படும் பற்றுறுதி, மரணத்தின் அச்சம் சூழந்தாலும், அணையாது விளங்கும் துணிவு என்று, கொலம்பிய நாடு பல பண்புகளைக் கொண்டுள்ளது.

இந்நாட்டிற்கு வருகை தரும் முதல் திருத்தந்தை நான் அல்ல. 2ம் வத்திக்கான் சங்கம் முடிவடைந்த உடனே, அருளாளர் திருத்தந்தை 6ம் பால் அவர்கள் இந்நாட்டிற்கு வருகை தந்தார். 1986ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் வருகை தந்தார். அவர்கள் வழங்கிய கருத்துக்கள், கொலம்பிய ஆயர்களுக்கு அரியதொரு கருவூலம்.

'முதலடியை எடுத்துவைப்போம்' என்பது, என் திருத்தூதுப்பயணத்தின் மையக்கருத்து. முதலடி எடுத்துவைப்பது இறைவன் என்பதை, விவிலியம் நமக்கு அடிக்கடி உணர்த்தியுள்ளது. தான் என்ற நிலையிலிருந்து, முதலடியை எடுத்துவைத்த இறைவன், அனைத்தையும் படைத்தார் (தொ.நூல் 1: 2,4), வாரிசின்றி தவித்த ஆபிரகாமைச் சந்திக்க இறைவன் வந்தார் (தொ.நூல் 18: 1-10) மோசேயைச் சந்திக்க வந்த இறைவன், புதிய தொடுவானங்களை அவருக்குக் காட்டினார் (வி.ப. 3: 1-12).

காலம் நிறைவுற்றபோது, கடவுள் எடுத்துவைத்த முதலடியின் பெயர், இயேசு. திரும்பிச் செல்ல இயலாத வகையில், இறைவன் அந்த அடியை எடுத்துவைத்தார்.

இறைவன் எப்போதும் நமக்கு முன் செல்கிறார். நாம் திராட்சைச் செடி அல்ல, கொடிகள். செபம் என்ற சாறு, நமக்குள் ஊறவில்லையெனில், ஆயர்களாகிய நாம், கனிதராத கொடிகளாக மாறிவிடுவோம்.

கடவுள் எடுத்துவைக்கும் முதலடியை மக்களுக்குக் கொணரும் அருளடையாளமாக இருங்கள். செயலாற்றும் திறமையை அளவுகோலாகப் பயன்படுத்தாமல், இறைவன் மீது உங்கள் கண்களைப் பதியுங்கள்.

வேற்றுமைகள் நிறைந்த கொலம்பியத் திருஅவையில், பிறரைப் புரிந்துகொள்ளும் முதலடியை நீங்கள் எடுத்து வையுங்கள். ஆப்ரிக்க-கொலம்பிய வேர்களைக் கொண்டிருப்போரைப் புரிந்துகொள்ள, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

காயமுற்ற உங்கள் நாட்டு வரலாற்றையும், மக்களையும் தொடுவதற்குத் தயங்கவேண்டாம். வன்முறை வழிகளை விடுத்து, அமைதி, ஒப்புரவு நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், கொலம்பியத் திருஅவை முதலடியை எடுத்துவைக்கட்டும். இது, கடினமான, ஆனால், மிக அவசியமான ஒரு பணி. காயப்பட்டிருக்கும் இந்நாட்டை ஒருங்கிணைத்து, குணமாக்குவது, உங்கள் கரங்களில் உள்ளது.

அமேசான் பகுதி திருஅவையைக் குறித்து, தனி கவனம் செலுத்த விழைகிறேன். அமேசான் இனத்தவர் பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய மொழியில், 'நண்பர்' என்ற எண்ணத்தைச் சொல்ல, 'என் அடுத்த கரம்' என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கேள்விப்பட்டேன். அமேசான் மக்களுக்கு 'அடுத்த கரமாக' கொலம்பியத் திருஅவை செயலாற்றட்டும்.

Chiquinquirá செபமாலை அன்னை, கொலம்பியத் திருஅவையுடன் துணையாக நடந்து, இறைவனின் ஆசீரைப் பெற்றுத்தருவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.