2017-09-08 15:47:00

இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை


செப்.08,2017. அன்பு சகோதரர்களே, இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க உணர்வை ஆழப்படுத்த, இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவையான CELAM முயற்சிகள் செய்துவருவதைப் பாராட்டுகிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன், ரியோ நகரில் உங்களைச் சந்தித்தபோது, Aparecidaவில் நிகழ்ந்த மாமன்றம் தந்த வழிமுறைகள் குறித்து உங்களிடம் பேசினேன். நற்செய்தியை ஒரு கொள்கை திரட்டாக, செயல்முறைத் திட்டமாக மட்டும் காணும் ஆபத்தைப் பற்றி குறிப்பிட்டேன்.

நற்செய்தி என்பது, திருஅவையை முன்னேற்றும் வழிமுறைகளைச் சொல்லித்தரும் திட்ட எடு அல்ல. இவ்வுலகை வழிநடத்த, மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் வழிமுறைகள்போல, திருஅவையை வழிநடத்தும் முறைகளைச் சொல்லித்தரும் பாடநூலாக நற்செய்தி அமைந்துவிடக்கூடாது. நற்செய்தி, நம்மை, சொந்த நலன்களிலிருந்து, ஆண்டவரை நோக்கி, அடுத்தவரை நோக்கி அழைத்துச் செல்லும் செயலாக மாறவேண்டும். பதட்டமும், குழப்பங்களும் நிறைந்த இவ்வுலகில் மறைபணியாற்ற செல்லும் சீடர்களாக வாழ, இறைவன் நம்மை அழைத்துள்ளார்.

அருகாமையும், சந்திப்பும் ஆண்டவன் பயன்படுத்தும் வழிமுறைகள். எனவே, ஆயர், ஆண்டவனுக்கும், அவரது மக்களுக்கும் அருகில் இருப்பது முக்கியம்.

தங்கள் பணிகளிலிருந்து உற்சாகத்துடன் திரும்பிவந்த சீடர்களிடம், "நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்" (மாற்கு 6:31) என்று இயேசு கூறினார். ஆயர்களின் பல்வேறு பணிகளுக்கிடையே, மனதை ஒருநிலைப்படுத்தும் வண்ணம் தனிமையில் இருப்பது மிக முக்கியம்.

இலத்தீன் அமெரிக்கத் திருஅவை, ஒருங்கிணைப்பின் அருளடையாளமாக இருக்கவேண்டும். தென் அமெரிக்க கண்டத்தில் காணப்படும் பன்முகக் கலாச்சாரச் செறிவை, முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.

இலத்தீன் அமெரிக்க திருஅவை, நம்பிக்கையின் அருளடையாளமாக இருக்கவேண்டும். இலத்தீன் அமெரிக்காவில், இந்த நம்பிக்கை, இளமை நிறைந்த முகம் கொண்டுள்ளது. இளையோர், இக்கண்டத்தின் நம்பிக்கை. அவர்களைப்பற்றிய முற்சார்பு எண்ணங்களை விலக்கிவிட்டு, அவர்கள் கண்களில் தெரியும் நம்பிக்கையை பொற்றி வளர்க்க வேண்டும்.

இலத்தீன் அமெரிக்காவில், இந்த நம்பிக்கை, பெண்மை நிறைந்த முகம் கொண்டுள்ளது. பெண்கள் இல்லையெனில், இலத்தீன் அமெரிக்கத் திருஅவை, மீண்டும், மீண்டும் பிறக்கக்கூடிய சக்தியை இழந்துவிடும். கோவில்களில் எளியப் பணிகளைச் செய்வோராக மட்டும் பெண்களைக் கருதாமல், திருஅவையின் மறைப்பணியாளர்களாக அவர்களைக் கருதவேண்டும்.

இலத்தீன் அமெரிக்கத் திருஅவையின் நம்பிக்கைக்கு அடித்தளம், இங்குள்ள பொதுநிலையினர். இத்திருஅவைக்குப் பணியாற்றும்போது, ஆழ்ந்த ஆர்வத்துடன், தாகத்துடன் நாம் பணியாற்றவேண்டும். நற்செய்திப்பணியில், ஆர்வமும், தாகமும் கொள்ள உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.