2017-09-07 14:33:00

திருத்தந்தையின் கொலம்பிய நாட்டுத் திருத்தூதுப் பயண விளக்கம்


செப்.07,2017. அமைதிக்காக நீண்ட காலமாக ஏங்கி, அதற்காக அரும்பாடுபட்ட கொலம்பிய நாட்டு மக்களிடம், “அமைதியை நோக்கி முதல் அடியை எடுத்து வையுங்கள்” என்ற அழைப்புடன் தனது முதல் காலடியைப் பதித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். செப்டம்பர் 06, இப்புதன் முற்பகல் 11.13 மணிக்கு உரோம் லெயோனார்தோ த வின்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்தில் தன்னோடு பயணம் செய்த, பல நாடுகளின் செய்தியாளர்களிடம், இப்பயணத்தில் அவர்கள் ஆற்றவுள்ள பணிகளுக்கு நன்றி தெரிவித்தார். இப்பயணம் சற்று சிறப்புமிக்கது. ஏனென்றால், இப்பயணம், கொலம்பிய மக்கள், அமைதியின் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கு உதவும் குறிக்கோளைக் கொண்டிருக்கின்றது. மேலும், வெனெசுவேலா நாட்டிற்காகவும் செபியுங்கள். அதன் வழியாக அந்நாடு, உரையாடலில் ஈடுபட்டு, நிலையான தன்மையைக் கண்டுகொள்ளும் எனவும் செய்தியாளர்களிடம் திருத்தந்தை கூறினார். அன்பு நண்பர்களே, ஒப்புரவு மற்றும் அமைதிக்கு அர்ப்பணித்து நான் மேற்கொள்ளும் இப்பயணத்தில், எனக்காகவும், கொலம்பிய மக்களுக்காகவும் செபியுங்கள் என்ற டுவிட்டர் செய்தியையும் திருத்தந்தை வெளியிட்டார்.   

இப்புதன், கொலம்பிய நேரம் மாலை நான்கு மணிக்குப் பின், கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவைச் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நகர் விமான நிலையத்தின் இராணுவப் பகுதியில் விமானம் தரையிறங்கியது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்திலிருந்து இறங்கி, விமானத்தள ஓடுபாதையில் நடந்துவந்தபோது,  அரசுத்தலைவர் Juan Manuel Santos, அவரது துணைவியார் உட்பட பல அரசு அதிகாரிகள், தலத்திருஅவைப் பிரதிநிதிகள் என, பெருமளவான பிரதிநிதிகள் குழு, இருபக்கமும் நின்று திருத்தந்தைக்கு வரவேற்பளித்தது. கொலம்பிய நாட்டு மரபு ஆடைகளில், பெருமளவான விசுவாசிகள் கூட்டமும் அங்கு நின்று, மரபுப் பாடல்களைப் பாடி, நடனம் ஆடி, கைகளைத் தட்டி, கொடிகளை ஆட்டி, மகிழ்வோடு வரவேற்றது. சிறாரும் சீருடையில் அழகாக அணிவகுத்து நின்றனர். அவர்களை ஒவ்வொருவராக வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சிறாரில், இம்மானுவேல் என்ற  சிறுவன், பீங்கானில் கையால் செய்யப்பட்ட புறா ஒன்றை, அமைதியின் அடையாளமாக, திருத்தந்தையை அணைத்து முத்தமிட்டுக் கொடுத்தான். இச்சிறுவன், முன்னாள் FARC புரட்சிக்குழுவின் பிணையல் கைதியாகிய  கிளாரா ரோஹாஸ் (Clara Rojas) என்பவரின் மகன். இச்சிறுவன், கிளாரா, பிணையல் கைதியாக இருந்தபோது பிறந்தவன்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானநிலையத்திலிருந்து பொகோட்டா நகருக்குச் செல்வதற்காகத் தயாராக நின்றிருந்த வாகனத்தில் ஏற நடந்துவந்தபோது, மிகவும் பாதிப்படைந்த நிலையில் அங்கு அமரவைக்கப்பட்டிருந்த, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயுற்ற சிறாரை ஆசீர்வதித்தார். மேலும், அவ்வழியில் ஓரிடத்தில் காத்திருந்த, கொலம்பிய உள்நாட்டுச் சண்டையில் உறுப்புக்களை இழந்த மற்றும், மாற்றுத்திறனாளி முன்னாள் இராணுவக் குழுக்களையும் பார்த்து ஆசீர்வதித்தார் திருத்தந்தை. பொகோட்டா விமானநிலையத்திலிருந்து, அந்நகரின் திருப்பீடத் தூதர் இல்லம் சென்ற 15 கிலோ மீட்டர் தூரத்தில், சாலைகளில் இருபக்கங்களிலும் மக்கள் பெருந்திரளாக நின்று திருத்தந்தையை வாழ்த்தினர். திருப்பீடத் தூதர் இல்லத்தில் இரவு உணவருந்தி உறங்கச் செல்வதற்குமுன், அந்த வளாகத்தில் நின்றிருந்த, பெற்றோரை இழந்த சிறார் மற்றும் ஏழை வளர்இளம் பருவத்தினரை வாழ்த்தினார். “மகிழ்வை இழக்காதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்” என்றும் இவர்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். இச்சிறாரை வாழ்த்தியபின், உறங்கச் சென்றார் திருத்தந்தை. எண்பது வயதைக் கடந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரிலிருந்து 12 மணி, 25 நிமிடங்கள் விமானப்பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயணத்தின் இரண்டாவது நாளாகிய செப்டம்பர் 07, இவ்வியாழன்தின நிகழ்ச்சிகள், உள்ளூர் நேரம் காலை 8.40 மணிக்கு ஆரம்பமாயின. அப்போது, இந்தியா, இலங்கை நேரம், இவ்வியாழன் இரவு 7 மணி, இருபது நிமிடங்களாக இருந்தன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில் மேற்கொண்டுவரும் இத்திருத்தூதுப் பயணம், அவரின் இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகும். ஐந்து நாள்கள் கொண்ட இப்பயணத்தில், பொகோட்டா, வில்லாவிசென்சியோ, மெடெலின், கார்த்தஜேனா ஆகிய நகரங்களுக்குச் சென்று, பல்வேறு குழுக்களைச் சந்தித்து, ஒப்புரவு மற்றும் நம்பிக்கையின் செய்தியை, மக்களுக்கு வழங்குவார். அன்னை மரியாவின் பிறப்பு விழாவான செப்டம்பர் 8, இவ்வெள்ளி, தேசிய ஒப்புரவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக அமைந்திருக்கும். கொக்கேய்ன் போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்புடைய மெடெலின் நகரில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, அருளபணியாளர்கள் மற்றும் துறவிகளைச் சந்தித்து இறையழைத்தல் பற்றிப் பேசுவார். ஒரு காலத்தில் 11 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்கள், விலங்குகள் போன்று சங்கிலிகளால் கட்டப்பட்டு, கப்பல்களின் கீழ்தளத்தில் அடைக்கப்பட்டு, கார்த்தஜேனா துறைமுக நகரில் அடிமை வர்த்தகம் செய்யப்பட்டனர். இந்நகரில், மனித மாண்பு மற்றும், மனித உரிமைகள் பற்றி திருத்தந்தை கவனம் செலுத்துவார். இந்நகரில், வீடற்றவர்கள் மற்றும், மனித வர்த்தகத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்களுக்கென கட்டப்படும் இல்லத்திற்கு மூலைக்கல்லை ஆசீர்வதிப்பார் திருத்தந்தை. அக்காலத்தில் ஆப்ரிக்க அடிமைகளுக்கு உதவிய இயேசு சபை புனிதர் பீட்டர் கிளேவர் திருத்தலத்தையும் தரிசிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவிற்கு, 1986ம் ஆண்டில், புனித  திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். இது நடந்து 31 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நாடு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உள்நாட்டுச் சண்டைக்குப்பின், தனது வரலாற்றை மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளது. ஆழமான மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இப்பாதையில் சில முக்கிய முடிச்சுகளையும் இந்நாடு அவிழ்க்க வேண்டியுள்ளது. இதில் மூன்று முக்கிய முடிச்சுகள் பற்றி, பீதேஸ் செய்தி கூறியுள்ளது. ஒன்று, கியூபா நாட்டு ஹவானாவில், 2016ம் ஆண்டில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தங்கள் மற்றும், முன்னாள் FARC புரட்சிக்குழுவின் எதிர்காலம் முன்வைக்கும் சவால்கள். இந்த அமைதி ஒப்பந்தம், நாட்டின் ஒப்புரவுக்கு மூலைக்கல்லாய், நாட்டின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியின் வாய்ப்புக்கும் தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆயுதங்களைத் திருப்பியளித்த முன்னாள் FARC புரட்சிக்குழுவினர், ஓர் அரசியல் சக்தியாக மாறுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர். புதிய அரசியல் கட்சி ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆயினும், இவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியுள்ளது. ஏனென்றால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள், இக்குழுவினர்மீது காழ்ப்புணர்வு கொண்டுள்ளனர்.

இரண்டாவதாக, கொலம்பியா அவிழ்க்க வேண்டிய முக்கிய முடிச்சு, போதைப்பொருள் வர்த்தகம். இந்த வர்த்தகமே, முன்னாள் புரட்சிக்குழுவினருக்கு, பொருளாதாரத்திற்கு கைகொடுத்தது. கொக்கெய்ன் போதைப்பொருளை உற்பத்தி செய்தவர்களுக்கு, மாற்று விவசாயத்தை அளிக்க வேண்டிய சவால், தற்போது அரசுக்கு உள்ளது. அதேநேரம், கடந்த மூன்று ஆண்டுகளில், கொலம்பியாவில் கொக்கெய்ன் விவசாயம் அதிகரித்திருப்பதாகவே சொல்லப்படுகின்றது. முன்னாள் புரட்சிக்குழுவினரும், அவர்களுக்கு ஆதரவளிப்போரும் மீண்டும் அதே உற்பத்திக்குத் திரும்பக்கூடும் என்ற அச்சமும் நிலவுகின்றது. மேலும், முன்னாள் FARC புரட்சிக்குழு அரசியல் கட்சியாக உருவெடுத்து, அமைதி ஒப்பந்தத்தை முழுமையாய் செயல்படுத்தினாலும், ELN எனப்படும், தேசிய விடுதலை இராணுவம் என்ற புரட்சிக்குழு, அமைதி ஒப்பந்தத்தை, இன்னும் முழுமையாய் செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகின்றது.

மூன்றாவதாக, கொலம்பியாவின் உள்நாட்டுச் சண்டையில் காணாமல்போனவர்கள் விவகாரம். இச்சண்டையில், 71 இலட்சத்து, 34 ஆயிரத்து 646 பேர் புலம்பெயர்ந்துள்ளனர். 9,83,033 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,65,927 பேர் காணாமல்போயுள்ளனர். 10,237 சித்ரவதைகளும், 34,814 கடத்தல்களும் இடம்பெற்றுள்ளன என்று, அண்மை புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பதில்சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அரசு. இச்சூழலில், திருப்பயணியாக வருகிறேன் எனச் சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில் மேற்கொண்டுவரும் திருத்தூதுப் பயணம், அம்மக்கள் எதிர்காலத்தை அமைதியிலும் ஒப்புரவிலும் கட்டியெழுப்புவதற்கு உதவும் என்பது பலரது எதிர்பார்ப்பு.

திருத்தந்தையும்,

அந்நாட்டினருக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், இந்த உலகிற்குப் பாலங்களைக் கட்டுவோர் தேவைப்படுகின்றனர். கொலம்பிய நாடு அமைதியைக் கட்டியெழுப்ப முயற்சித்து வருகிறது. அந்நாட்டிற்கு, நிலைத்த மற்றும் உறுதியான அமைதி தேவை. அந்நிலையில்தான் ஒருவர் ஒருவரை, எதிரிகளாக அல்ல, உடன்பிறந்தவர்களாக நோக்க முடியும் எனக் கூறியுள்ளார். எனவே, திருத்தந்தையின் கொலம்பியத் திருத்தூதுப் பயணத்தின் நோக்கம் நிறைவேற, வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னையிடம் மன்றாடுவோம். அமைதியின் அரசியாம் அன்னை மரியா, நம் எல்லாருக்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் சுகம் அளிப்பாராக.  

“முதல் அடியை எடுத்து வைப்போம்” என்ற விருதுவாக்குடன் திருத்தந்தையின் கொலம்பியத் திருத்தூதுப்பயணம் இடம்பெற்று வருகின்றது. இப்பயணத்தை நிறைவுசெய்து, செப்டம்பர் 11, வருகிற திங்கள், பகல் 12.40 மணிக்கு உரோம் வந்து சேருவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.