2017-09-07 15:25:00

நீட்டை எதிர்த்து அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா இராஜினாமா


செப்.07,2017. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தனக்கு அனுமதி அளிக்கப்படாததால், ஆசிரியப் பணியை இராஜினாமா செய்வதாக விழுப்புரம், வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக 'தி இந்து' இணையதளத்துக்கு சபரிமாலா அவர்கள் அளித்த பேட்டியில், “நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். அரசுப்பணியில் இருப்பவர்கள் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றார்கள். ஒரே கல்வி இல்லாத நாட்டில் ஒரே தேர்வு மட்டும் எப்படி இருக்க முடியும்? என்பதைக் தட்டிக்கேட்க, கற்பிக்கும் ஆசிரியருக்கு உரிமை இல்லை. அதனால் பணியைத் துறக்க முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறேன்” என்று கூறினார்.

“வகுப்பறைகளில் ஆண்டுக்கு 30 மாணவர்களை உருவாக்கதான் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இனி கிராமங்கள்தோறும் சென்று லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்குவேன்'' என்று ஆசிரியை சபரிமாலா அவர்கள் கூறினார்.

உங்களின் ராஜினாமா முடிவை குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டனர் என்று கேட்டதற்கு, ''உன்னுடைய எண்ணங்களை முழு சுதந்திர உணர்வோடு வெளிப்படுத்தும் உரிமை உண்டு. வெற்றி பெறும் அனிதாக்களை வருங்காலத்தில் உருவாக்க வாழ்த்துகள் என்று என் கணவர் கூறினார்'' என்றார் சபரிமாலா.

விழுப்புரம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு அவர் அளித்துள்ள இராஜினாமாக் கடிதத்தில், ''சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையைவிட தேசம் முக்கியம் என்பதால், ஆசிரியப் பணியினை இராஜினாமா செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தன் 7 வயது மகனுடன் பள்ளியில் போராட்டம் நடத்தியவர் சபரிமாலா என்பது குறிப்பிடத்தக்கது.

சராசரி ஆசிரியராக இயங்கி வந்த தன்னை, தன்னம்பிக்கையாளராக, வெற்றியாளராக மாற்றியதே படிக்காதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட, கற்பதில் சவால் மிகுந்த குழந்தைகள்தான் என்கிறார் சபரிமாலா.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி 'கலாம் போல் ஆகலாம்' இயக்கத்தை மாணவர்களைக் கொண்டே தொடங்கி, பள்ளிகளில் கலாம் குறித்துப் பேசிவருகிறார் சபரிமாலா.

ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், நூலகர், கவிஞர், பாடலாசிரியர், சமூக ஆர்வலர் என, பன்முகங்கள் கொண்ட ஒன்றாம் வகுப்பு ஆசிரியர், சபரிமாலா அவர்கள் தற்போது, முனைவர் பட்டம் பெறும் நிலையை அடைந்துள்ளார்.

முனைவர் பட்டம் பெற்ற ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவதையே ஆசிரியை சபரிமாலா அவர்கள் விரும்புகிறார் என்று தி இந்து நாளிதழ் கூறியுள்ளது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.