2017-09-07 16:05:00

தஞ்சம் புகுந்திருக்கும் இளையோர், தீவிரவாதிகள் அல்ல


செப்.07,2017. நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றார் கனவுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் இளையோர், குற்றவாளிகளோ, தீவிரவாதிகளா அல்ல என்று நியூ யார்க் பேராயர், கர்தினால் திமோத்தி டோலன் அவர்கள், செப்டம்பர் 6 செய்தியாளர்களிடம் கூறினார்.

இளையோரைக் காக்கும் நோக்கத்துடன், DACA என்ற பெயரில், முன்னாள் அரசுத்தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் உருவாக்கியத் திட்டமொன்றை, தற்போதைய அமெரிக்க அரசு கைவிடுவதாக, இப்புதனன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நியூ யார்க் பெருநகர அவையில், ஏனையத் தலைவர்களோடு இணைந்து, தன் கண்டனத்தை வெளியிட்ட கர்தினால் டோலன் அவர்கள், தடுக்கப்படும் இளையோரில் பெரும்பாலானோர் கத்தோலிக்கர் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

எந்த ஒரு சட்டமும் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர, மனிதர்கள் சட்டத்திற்காக உருவாக்கப்படவில்லை என்பதை, அமெரிக்க மக்கள் உணரவேண்டும் என்றும், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஆயர்கள் கண்டனம் செய்வதில் ஒருமனப்பட்டிருக்கின்றனர் என்றும், கர்தினால் டோலன் அவர்கள், Crux என்ற கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் எடுத்துரைத்தார்.

DACA திட்டத்தினால், அமெரிக்க ஐக்கிய நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சிறார் மற்றும் இளையோர் பயனடைந்து வருகின்றனர் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : Cruxnow.com / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.